கல்லில் செதுக்கப்பட்ட கிரயப்பத்திரம்! அதிசய கல்வெட்டு! இப்படி எல்லாமா உயில் எழுதுவாங்க?

ஒருவர் தான் சம்பாதித்த சொத்துக்கள் தனக்கு பின்னால் யாருக்கு,அல்லது எதற்குச் சேரவேண்டும் என எழுதிவைக்கும் ஆவணத்துக்கு ஆங்கிலத்தில் வில் என்று பெயர்.


அது தமிழில் உயில் ஆகிவிட்டது.அதை சாதாரணமாக முத்திரைத் தாளில் எழுதி பதிவு செய்து வைப்பார்கள். ஆனால்,சென்னை சூளையைச் சேர்ந்த பா.சாமி நாயுடு என்பவர் கடப்பா கல்லில் கல்வெட்டாக எழுதி பதிவு செய்திருக்கிறார்.சென்னையில் இருக்கும் தன் வீடுகள் மூலம் வருகிற வாடகையை ஆந்திராவில் அவர் ஏற்படுத்தினிருந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பயன்படுத்த வேண்டும் என்று அந்த உயில் சொல்கிறது.

படித்துப் பாருங்கள் 1934ம் வருடத்து தமிழை.எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முந்தைய தமிழ் வடிவத்தை படத்தில் பார்க்கலாம். இனிக் கல்வெட்டு,          ஸ்ரீராமஜெயம் ஸ்வாமி ஹயர் கிரேடு எலிமெண்டரி தர்ம பாடசாலை ,ஸ்ரீராமபுரம்.சிலாஸனம்.( ரிஜீஸ்டர்டு) சென்னை சூளை,ஆவடி ஸ்ரீனிவாச அய்யர் தெருவு 21நி ,வீட்டில் வசிக்கும் ,விஷ்னு மதம் கம்ம குலம் மாகர்ல லோகையா நாயுடு குமாரர் மா.சாமி நாயுடு அவர்களால் ஏற்படுத்திய சிலாஸனம்.

என்னுடைய சுயார்ஜிதமாக சம்பாதித்த , சென்னை தங்கசாலைத் தெருவு,127,128,129,130 நிகள் வீட்டின் வரும்படியான குடிக்கூலிகளை,சித்தூர் ஜில்லா,நாராயணவரம் கிராமத்திற்கு அடுத்த எனது ஜனன பூமியான ஸ்ரீராமபுரம் கிராமத்தில் என்னால் ஸ்தாபிக்கப்பெற்ற ,ஸ்வாமி ஹிந்து ஹயர் கிரேட் எலிமெண்டரி தர்மபாடசாலை உபாத்தியாயர் சம்பள சிலவுக்கு உபயோகப்படுத்த வேண்டியது.

மேலே கண்ட சிலாஸாசனம் என் திருகர்ண சுத்தியுடனும்,நல்ல ஞாபக சக்தியுடனும் செய்துவைத்திருக்கிறேன்.மேலே கண்ட வீடுகள் என்னாலாவது,என்னைச்சேர்ந்த அக்குதாரர்களாவது தானாதி விக்கிரங்களுக்கு செல்லத் தக்கது அல்ல.

மா.சாமி நாயுடு மதராஸ். 12-4-1934