300 கிலோ வெயிட்டை வெறும் 86 கிலோவாக குறைத்த குண்டுப் பெண்! அதிசயம் ஆனால் உண்மை!

விரார்: 4 ஆண்டுகளில், 300 கிலோவில் இருந்து, 86 கிலோவாக, தனது உடல் எடையை இந்த பெண்மணி குறைத்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம், வாசை பகுதியை சேர்ந்தவர் ரஜனி. 42 வயதாகும் இவர், 4 ஆண்டுகளுக்கு முன், 300 கிலோ உடல் எடையுடன் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தனது உடல் எடையை குறைப்பதற்காக, அவர் டாக்டர் ஷஷாங் ஷாவின் உதவியை நாடியுள்ளார். இதன்படி, பேரியாட்ரிக் அல்லது உடல் எடை குறைப்பு சர்ஜரியை செய்து, படிப்படியாக, அந்த பெண்ணின் எடையை ஷஷாங் ஷா குறைத்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் உடல் எடை 86 கிலோவாக உள்ளது.

இதுபற்றி லிம்கா சாதனை புத்தகத்தில் குறிப்பிடும்படி, விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாக ரஜனி இருந்தார். அவரை தற்போது, 86 கிலோ எடை உள்ளவராக, ஷஷாங் ஷா மாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ள ரஜனி, எனக்கு 6 வயது முதலே, உடல் எடை தாறுமாறாக அதிகரிக்க தொடங்கியது. 16 வயதிலேயே எனக்கு, 126 கிலோ எடை ஏற்பட்டு, மிகவும் சிரமப்பட்டேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 300 கிலோ உடல் எடையை தொட்ட நிலையில், படுத்த படுக்கையாகவே கிடந்தேன். என்னை பராமரிக்க, 3, 4 பேர் வேலைக்கு வைக்க நேரிட்டது. இந்நிலையில்தான், டாக்டர் ஷஷாங் ஷா எனக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார், என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இத்தகைய அறுவை சிகிச்சை முறை, இந்திய மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.