ஜெயிச்சது பொம்பளைங்க, ஆனா ஆளப் போறது ஆம்பிளைங்க. என்னடா உள்ளாட்சி இது!

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படுள்ளது. இதன்படி, அதிகாரம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று ஜனநாயக ரீதியில் மார்தட்டிக் கொள்ளலாம்.


ஆனால், ஜெயிச்சது பெண்கள் என்றாலும், ஆளப் போறது ஆண்கள் மட்டும்தான் என்று இப்போதே கூக்குரல் கேட்கிறது. ஆம், பதவியேற்பு உறுதிமொழியைக் கூட பெண்ணை எடுக்கவிடாமல், பெண்ணின் கணவர் உறுதிமொழி எடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இதனை தடுக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணே, ‘என்னோட புருஷன் உறுதிமொழி எடுத்துக்கட்டும்’ என்று சொல்லும்போது, அதிகாரிகளால் வேடிக்கைதான் பார்க்க முடியும் என்கிறார்கள். 

இனி, அந்தப் பெண்கள் எப்போதும் போல் வீட்டில் அடைத்து வைக்கப்படுவார்கள். கூட்டத்திற்கும் ஆண்களே பங்கெடுத்து, ஆண்களே முடிவெடுத்து, ஆண்களே ராஜ்ஜியம் நடத்துவார்கள். ஆனால், பெயர் மட்டும் பெண்களுக்கானதாக இருக்கும். இந்த நிலை இன்னமும் நீடிக்கத்தான் வேண்டுமா என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது.

சட்டங்கள் செய்வதும், சட்டங்களை ஆளவும் பெண்களால் முடியும் எனும்போது, ஆண்களை வைத்து ஆட்சி செய்யும் பெண்கள் அவமானச் சின்னங்கள்தான். சிங்கப்பெண்ணே என்று பாடினால் மட்டும் போதாது, உண்மையிலே சிங்கப்பெண்ணாக பெண்கள் இருக்கத்தான் வேண்டும்.