ஐயப்பனை பெண்கள் தரிசிக்கலாம், ஆனா தரிசிக்க முடியாது! தள்ளிப்போகும் தீர்ப்பு!

சபரிமலைக்கு பெண்கள் சென்று தரிசனம் செய்யலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.


நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒரு அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று தலைமை நீதிபதி அறிவித்து முடிவை தள்ளிவைத்துவிட்டார். 5 பேர் கொண்ட அமர்வினால் சரியான தீர்வு எட்டமுடியவில்லை என்று 7 பேர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எல்லா வயதுப் பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது, இன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிரம்பியிருந்தது.

ஆனால், மக்களின் மத நம்பிக்கை குறித்து இன்னமும் அதிக விசாரணை தேவைப்படுகிறது என்று, ‘மறு சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்கும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இது ஐய்யப்பன் கோவில் மட்டுமே சம்பந்தப்பட விவகாரம் அல்ல, பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதையும் சேர்த்தே விசாரணை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. 

இப்போது பெண்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்று தீர்ப்பு இருந்தாலும், உள்ளே செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. இந்த நிலையில்மேலும் இதே பிரச்னை இன்னும் சில மாதங்களோ, வருடங்களோ தொடரத்தான் போகிறது.