சபரிமலைக்கு முதன் முதலில் சென்ற பெண்ணை வீட்டை விட்டு விரட்டி அடித்த கணவன்!

சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட்ட கனகதுர்கா எனும் பெண்ணை அவரது கணவர் வீட்டைவிட்டு விரட்டி அடித்துள்ளார்.


கேரள அரசுப் பணியாளரான கனகதுர்கா கடும் எதிர்ப்பு மீறி பிந்து எனும் பெண்ணுடன் சேர்ந்து சபரிமலை கோவிலுக்கு சென்றார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு சென்று அய்யப்பனை வழிபட்டதாகவும் கனகதுர்கா கூறினார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

   பிரம்மச்சாரியான அய்யப்பன் கோவிலுக்கு 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கனகதுர்கா சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட்டு திரும்பினார்.

   ஆனால் பாரம்பரியத்தை சீரழித்துவிட்டதாக கனகதுர்காவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு கனகதுர்காவால் திரும்பமுடியவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் இருந்த அவர் கடந்த வாரம் ரகசியமாக அவரது வீட்டிற்கு சென்றார்.

  ஆனால் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் பாரம்பரியத்தை மீறியதாக கூறி கனகதுர்காவின் மாமியார் அவரை அடித்து விரட்டினார். இதனால் தலையில் காயம் அடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வீடு பூட்டிக் கிடந்துள்ளது.

   கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கனகதுர்காவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட கனகதுர்கா தற்போது கேரள அரசிடம் தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

   கனகதுர்கா செய்த காரியத்தால் தனக்கு மட்டும் அல்லாமல் தனது குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார். எனவே கனகதுர்காவுடன் சேர்ந்து வாழ முடியவே முடியாது என்று அவரது கணவர் திட்டவட்டமாக கூறி வருகிறார். அய்யப்பன் கோவிலுக்கு சென்று திரும்பியதற்காக கனகதுர்கா அடித்து விரட்டப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.