ரூ.85 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 லட்சம்! பொள்ளாச்சி ரூபினி பிரியா இனிக்க இனிக்க கொடுத்த ஆஃபர்!

டிரஸ்ட் மூலம் வீடு கட்ட பணம் தருவதாக கூறி, அதனை பெறுவதற்கு முன் பணம் செலுத்திய பலர் மோசடி அடைந்துள்ளதாக ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த டிஎஸ்பி சுப்பிரமணியம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த மோசடியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரூபிணி பிரியா என்ற பெண் போலி டிரஸ்ட் மூலம் பண மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் மூலம் ஏஜெண்டுகளிடம் பேசி பொது மக்கள் பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள தகவல்கள் அம்பலமாகியுள்ளது. இதுமட்டுமல்லாது இன்னும் சில பெயர்களில் டிரஸ்டுகள் நடத்தி அதில் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.  

இந்த சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், "வீடு கட்ட பணம் தருவதாகக் கூறி அதற்கு முன்பாக சுமார் 25 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை பொதுமக்களிடம் வசூலித்து ஏமாற்றியுள்ளனர். இந்த கும்பல் இதுவரை 18 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் இன்னும் சில டிரஸ்ட்டுகள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. விரைவில் அவர்களை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது" என்றனர்.