மாறன் குடும்பம் மொத்தமாக திமுகவில் இருந்து நீக்கம்! ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

ராகுல் காந்தியை இந்தியப் பிரதமராக முன்மொழிந்தது மூலம் இந்திய அளவில் பரபரப்பு கிளப்பிய ஸ்டாலின், அந்த விழா மேடையில் நடந்த பஞ்சாயத்தில் செம கடுப்பாகிவிட்டாராம். அதற்கடுத்தும் நடந்த ஒரு விவகாரம் காரணமாக, மாறன் குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கிவைக்கும் அளவுக்கு தீவிர யோசனையில் ஸ்டாலின் இருக்கிறாராம்.


ஏற்கெனவே கருத்துக்கணிப்பு வெளியிட்டு தினகரன் அலுவலகம் கொளுத்தப்படும் அளவுக்கு தி.மு.க.வுக்குள் பிரச்னையை உருவாக்கியது மாறன்கள் தான். அந்த சச்சரவினால் தி.மு.க. குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத மூன்று ஊழியர்கள் செத்ததுதான் மிச்சம். அதன்பிறகு கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்று பணத்தைப் பார்த்ததும் கருணாநிதி வாயைத் திறந்து அவர்களை சேர்த்துக்கொண்டார். ஆனாலும் அழகிரி கோபம் குறையாமல் இருக்கவே, மாறன் குடும்பத்தினர் இதுவரை அமைதியாக இருந்தனர்..


இப்போது அழகிரியை கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் முழுமையாக ஸ்டாலின் ஓரம் கட்டிவிட்டார். அதேபோல் கனிமொழியையும் அமைதிப்படுத்திவிட்டார். கலைஞர் டி.வி.யில் ராசாத்தியம்மாள் பெயருக்கு இருக்கும் ஷேர்களை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவற்றை வாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் அழகிரிக்கு ஷேர்கள் இருப்பதால், தயாளு அம்மாள் மறைவுக்குப் பிறகு, பிரச்னை வரலாம் என்ற எண்ணத்தில்தான் இப்போது புதிய தொலைக்காட்சி, புதிய நாளிதழ், வார இதழ் போன்ற ஐடியாக்களில் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின்.

ஆனால், இந்த விவகாரம் மாறன் குடும்பத்துக்கு பெரும் அவமானத்தையும் கோபத்தையும் உண்டாக்கி இருக்கிறதாம். கருணாநிதி உயிருடன் இருந்தபோது, டெல்லியை கனிமொழியும், சென்னை சார்ந்த பகுதிகளை ஸ்டாலினும், மதுரைக்கு அந்தப் பக்கம் அழகிரியும் ஆட்சி புரிந்துவந்தார்கள். ஆனால், தொழில் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் மாறன் குடும்பத்தினர் கவனித்துக்கொண்டனர்.


ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. அழகிரி, கனிமொழியை அடக்கிவிட்டு அந்த இடத்துக்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை நியமித்துவிட்டார் ஸ்டாலின். அதாவது டெல்லிக்கு சபரீசன், தமிழக அரசியலுக்கு உதயநிதி என்று பாகம் பிரித்துவிட்டார். உதயநிதி இன்னமும் விளையாட்டுப் புத்தியுடன்(?) இருப்பதால், அவரது தோழர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தை உதயநிதியின் பேரில் ஆட்சி புரிந்துவருகிறார். உதயநிதி, சபரீசன் இருவருக்கும் படைத்தளபதியாக வேலு இருந்து கட்சிப் பணிகளை கருத்துடன் கவனித்து வருகிறார்.


ஏற்கெனவே விஜய் சர்கார் படம் பிரச்னை காரணமாக மாறன் குடும்பத்துக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் கொஞ்சம் உரசல் இருந்தது. இந்த நேரத்தில் சோனியா கலந்துகொள்ளும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று மாறன் குரூப் பொங்கிக்கொண்டு இருந்தனர்.

விழா மேடையில் அமர்பவர்கள் பட்டியலிலும் மாறன் பெயர் இல்லை என்றதும் கோபத்தின் உச்சிக்கே போய் செல்வி மூலம் தூது விட்டார்கள். மேடையில் தயாநிதி மாறனை அமரவைக்கவில்லை என்றால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று செல்வி சாமியாடி தகராறு செய்திருக்கிறார். விழா நேரத்தில் பிரச்னை வேண்டாம் என்றுதான் படியோரம் தயாநிதிக்கு ஒரு சீட் ஒதுக்கிக் கொடுத்தார்கள். அவருக்கு செக் வைப்பது போன்று ஆ.ராசாவையும் மேடை ஏற்றினார்கள்.


இதனால் கடுப்பாகிக்கிடந்த மாறன் வட்டாரம், மத்திய சென்னையில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளை நாங்கள் தொடங்கப் போகிறோம் என்று மாவட்டச் செயலாளர்களையும் ஒருசில தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்துப் பேசியிருக்கிறார்கள்.

உடனே நிர்வாகிகள் ஸ்டாலினுக்குத் தகவல் சொல்ல, தி.மு.க. வட்டாரம் கொந்தளித்துவிட்டதாம். ‘‘நமது தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள். அதனால் நாடாளுமன்றத்தில் ஒரே ஒருவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும். இந்த முறை கனிமொழிக்கு தூத்துக்குடியில் நிற்பதற்கு வாக்கு கொடுத்திருக்கிறோம். அடுத்த முறை பார்க்கலாம் அல்லது சட்டசபைக்குத் தேர்தலில் நிற்கலாம்‘ என்று மாறன்களிடம் சொல்லப்பட்டதாம்.

அதெல்லாம் முடியாது என்று போர்க்குரல் எழுப்பியிருக்கும் மாறன் சகோதரர்கள், ஸ்டாலினின் புதிய தொலைக்காட்சி முயற்சிக்கும் தடை போட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். இப்போது அழகிரி இல்லை என்பதால் ஸ்டாலின் நிச்சயம் அதிரடி நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பதை உறுதி செய்துகொண்டுதான் அழுத்தம் கொடுக்கிறார்களாம். ஆனால், இந்த விவகாரத்துக்காக  தூது வந்தவரிடம் நெற்றிக்கண் திறந்துவிட்டாராம் ஸ்டாலின்..

‘‘நீங்களே மாறன் குடும்பத்துக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் திருந்தவில்லை என்றால், ஜெயலலிதா பாணியில், ‘இந்தக் குடும்பத்துக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘ என்று அறிக்கை வெளியிட்டுவிடுவேன்’ என்று சொல்லி இருக்கிறாராம்.

தன்னுடைய மகன், மருமகன் தவிர வேறு யாரையும் கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று உரிமைக் குரல் எழுப்பும் ஸ்டாலினைப் பார்த்து தி.மு.க.வினர் ரொம்பத்தான் பெருமைப்படுகிறார்களாம். கருணாநிதிக்குப் போன்று ஸ்டாலினுக்கும் பணத்தைக் கொடுத்து வாயை அடைத்துவிடலாம் என்று மாறன் குடும்பம் திட்டமிடுகிறதாம்.

நல்லாயிருங்கப்பா...