ஸ்டாலினை புறக்கணித்த பொன்முடி. பதவி கேட்டு போராட்டம். பணிந்து போவாரா ஸ்டாலின்..?

துரைமுருகனுக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் பதவிகளை பிரித்துக் கொடுத்துவிட்டால், பிரச்னைகள் தீர்ந்துபோகும் என்று கணக்குப் போட்டிருந்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ஆனால், இப்போது பிரச்னை அதிகமாகியுள்ளது.


ஆம், அடுத்ததாக பொன்முடி பதவி கேட்டு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அதனால் தானோ என்னவோ, நேற்றைய தினம் டிஜிட்டலில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் முன் பொன்முடி ஆஜராகவில்லை. 

பொன்முடி என்ன எதிர்பார்க்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது நேருவுக்கு இணையாக ஒரு பதவி கேட்கிறார் பொன்முடி. இப்போது நேரு தலைமை கழக முதன்மைச் செயலாளராக இருக்கும் நிலையில், தனக்கும் அதே போன்ற அல்லது அதைவிட பெரிய பதவி வேண்டும் என்று நினைக்கிறார்.

சமீபத்தில் இதற்காக பேச்சு நடத்திய தி.மு.க. புள்ளி ஒருவர், துணைப் பொதுச் செயலாளர் பதவி தருவதற்கு ஸ்டாலின் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அப்படி ஒரு பதவி தேவையில்லை, எனக்கு நேருவைப் போன்றே தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிதான் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாடு முழுவதும் மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அறிவாலயத்தில் மட்டும் பதவிச் சண்டை நடப்பது மக்களை கடுமையாக கடுப்பாக்கியுள்ளது.