எடப்பாடி பேச்சுக்கு பதில் சொல்வாரா ஸ்டாலின்..? போராட்டம் அர்த்தமுள்ளது என்று நிரூபிப்பாரா..?

இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுத்துவருகிறார் ஸ்டாலின். குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கைவிடும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று சொல்லிவருகிறார்.


ஆனால், இந்தப் போராட்டம் தேவைதானா என்று சட்டசபையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரே ஒரு இஸ்லாமியராவது இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக எடுத்துச்சொல்லுங்கள் என்று ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார்.

இப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள். எடப்பாடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல யாருமே இல்லை எனும்போது, ஏன் இந்தப் போராட்டம் என்ற சந்தேகம் சாதாரண பொதுஜனத்திற்கு எழுவது இயல்புதான். அதைத்தான் செய்திருக்கிறார் எடப்பாடி.

அன்றைய தினமே பதில் சொல்லவேண்டிய ஸ்டாலின் டீம், அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளிநடப்பு செய்திருந்தன என்பது உண்மை என்றாலும், அது மக்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

அவர்களுக்குத் தேவை தெளிவான பதில். எடப்பாடி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், அதற்கு தெளிவான பதில் சொல்லவேண்டியது ஸ்டாலினின் கடமை. அதனால் இந்தியக் குடிமக்களாக உள்ள இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவருக்கோ எப்படி, எந்த வகையில்,ஏப்போது பாதிப்பு ஏற்படும் என்று விளக்கவேண்டும். அந்த விளக்கத்தை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் எடப்பாடி விடுத்த சவாலை, ஸ்டாலின் எதிர்கொண்டு ஜெயித்ததாக சொல்ல முடியும். அதைவிட்டு தப்பி ஓடி ஒளியக் கூடாது என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?