டிடிவி - ஸ்டாலின் கூட்டணி! ஜானகி ஆட்சியைக் கலைத்த வரலாறு ஞாபகம் இருக்கிறதா?

திமுகவுக்கும் தினகரனுக்கும் ரகசியக் கூட்டணி இருக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய மூன்று தினங்களுக்குள் தங்க.தமிழ்ச்செல்வன் பேச்சு தமிழக அரசியலை கலங்கடித்திருக்கிறது.


எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் தினகரனுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள். அப்படி நடந்துவிட்டால் அனைத்து அ.தி.மு.க.வினரும் தன்னுடன் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார். அதனால்தான், அதிமுகவை வீழ்த்துவதற்கு எங்களுக்கு திமுக ஆதரவு கொடுத்தாலும்கூட, அடுத்து திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என்று தங்கதமிழ்செல்வன் சொல்லியிருக்கிறார்.

 இப்போது தமிழக அரசியல்வாதிகள் மனதில் இருக்கும் ஒரே கேள்வி இதுதான். இரண்டு பேரும் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க முன்வருவார்களா? எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல அதிமுகவைப் பொது எதிரியாக வரித்துக்கொண்டு தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுமா என்பதுதான்.

இப்படித்தான் ஜானகி அணிக்கு கருணாநிதி உதவி செய்வார் என்று பலரும் கடைசி நொடி வரை நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து விவரமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அப்படியேதான் இப்போதும் தி.மு.க. நடந்துகொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

தன் வழி தனி வழியாக இருக்கவேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். ஏனென்றால் நாளைக்கு தினகரன் பெரிய தலைவராக உருவாகிவிடக் கூடாது என்பதிலும் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால், தனித்தனியேதான் சண்டை போடுவார்கள் என்று சொல்லலாம்.