2 வாரம் அமெரிக்க பயணம்! திரும்பி வரும் போது ஆட்சி இருக்குமா? எடப்பாடியாரின் புது இன்சார்ஜ் யார் தெரியுமா?

வரும் 28ம் தேதி துவங்கி இரண்டு வாரப் பயணமாக இங்கிலாந்து வழியாக அமெரிக்கா போகும் எடப்பாடியின் பெரிய கவலையே தான் திரும்பி வரும்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருக்குமா என்பதுதான்.


அண்ணா அமெரிக்கா போய்வந்தார் கலைஞர் சி.எம் ஆகிவிட்டார். எம்ஜிஆர் அமெரிக்கா போய்வந்தார் ஜானகி முதல்வரானார். இப்படி ஒரு ட்ராக் ரிக்கார்ட் இருப்பதால் உதறல் எடுக்காதா. அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் நோய் இருந்தது தனக்கும் கட்சிக்கும் தேனிக்காரர்தான் அந்த நோய் என்று எடப்பாடி கருதுகிறார். அதனால் தான் திரும்பி வரும்வரை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை தனது நம்பிக்கைக்கு உரிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடமும் ஒப்படைத்திருக்கிறார். 

ஒரு வேளை இவர்களால் முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில்  வெங்கைய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த அமித்ஷாவிடமும் விலாவாரியாக விளக்கி இருக்கிறாராம். கட்சியை மறுபடியும் உடைத்து விடாதீர்கள் என்பதைத்தாண்டி வேறு ஒன்றும் ' கமிட் ' செய்யாமல் பேசியதுதான் எடப்பாடியின் பதட்டத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

எடப்பாடி இல்லாத சமையத்தில் ஒபிஎஸ் என்ன செய்யப் போகிறாரோ, தெரியாது. ஆனால், எடப்பாடி அமெரிக்கா போனதும் புதிய ஐ.டி துறை அமைச்சர் உதயகுமாரும், பால்வளத்துறை அமைச்சரும் நேராக அமெரிக்கா சென்று முதலீட்டாளர்களை சந்திப்பது, அமெரிக்கப் பால் பண்ணைகளை பார்வையிடுவது என்று எடப்பாடியோடு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்கள். கோட் சூட்டில் ராஜேந்திர பாலாஜியை பார்ப்பதற்கும் அவரது  அமெரிக்க அனுபவங்களை மீம் ஆக்குவதற்கும் பலபேர் குறிவைத்து காத்திருக்கிறார்கள்.