அமைச்சர்களைக் காட்டிக் கொடுப்பாரா பொன்.மாணிக்கவேல் அல்லது கைது செய்யப்படுவாரா பொன்.மாணிக்கவேல்?

சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பகீர் கிளப்பியிருக்கிறார் பொன்.மாணிக்கவேல்.


அமைச்சர்கள் மீது குற்றம் இருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், பொன்மாணிக்கவேல் நடவடிக்கைக்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டுகிறது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு. இந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து கைப்பற்றி இந்துத்துவக் கும்பலிடம்  ஒப்படைப்பதுதான் பொன்.மாணிக்கவேலின் செயல்திட்டம் என்று குற்றம் சாட்டுகிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வன்னி அரசு.

உயர் நீதிமன்றத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர்பாட்சா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு வந்தது. “சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளனோடு சேர்ந்து என்னை பழிவாங்குகிறார். ஆகவே பொன்.மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று அந்த மனுவில் காதர்பாட்சா கோரியிருந்தார்.

இந்த வழக்கில் உண்மையாகவே பொன்மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதை புரிந்து கொண்ட அவர், அவசரம் அவசரமாக தன்னையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனு போட்டார். அந்த மனுதாரர் காதர்பாட்சாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் மீடியாக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல ஒரு அதிரடி குண்டை வழக்கம் போல போட்டார் பொன்.மாணிக்கவேலு.

அதாவது, “சிலை கடத்தல் வழக்கில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறது”என்பது தான் அந்த விளம்பர குண்டு. வழக்கிலிருந்து தப்பிக்க மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் நினைத்த அரசியலுக்கும்  வந்துவிடுகிறார் பொன்.மாணிக்கவேலு. இதற்கு முன்பு, “சிலை கடத்தலுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு” என்று பாஜகவின் எச்.ராஜா குற்றம் சுமத்தியதற்கும் பொன்மாணிக்கவேலின் இந்த குற்றச்சாட்டுக்கும் ஒரு  தொடர்பு உண்டு.

அதனால், காதர்பாட்சா குறித்த குற்றச்சாட்டுக்கு தங்கள் பதில் என்னவென்று கேட்டால், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்துவது ஏன்? அமைச்சர்கள் மீதான குற்றச்செயலுக்கு ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்தில் சொல்வதன் ரகசியம் என்ன? எல்லா கைது நடவடிக்கைகளையும் நீதிமன்றத்துக்கு கொண்டு போய் தான் கைது செய்தீர்களா? அப்படி சட்டத்தில் இடமிருக்கிறதா?

இந்து அறநிலையத்துறை ஒரு ஊழல் மிகுந்த துறை என்றும் இதை நிர்வாகம் செய்ய இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை நீதிமன்றத்தின் மூலம் மக்கள் மன்றத்தில் நாறடிப்பதற்கான திட்டம்தான் இந்த குற்றச்சாட்டு. உண்மையாகவே சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பிருந்தால் கைது செய்வதை யாரும் தவறு சொல்ல மாட்டார்கள். ஆனால், பொன்.மாணிக்கவேலின் உள்நோக்கம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அல்ல;  சமூகநீதியின் அடையாளமாக இருக்ககூடிய இந்து அறநிலையத்துறையை

அரசிடமிருந்து பறித்து இந்துத்துவக் காவிக் கும்பலிடம் ஒப்படைப்பதுதான் திட்டம். அதனால் பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறார் வன்னி அரசு. என்னப்பா இப்படி சொல்றீங்க?