கோயில் குருக்கள் தர்ஷனுக்காக நடராஜர் வந்து சாட்சி சொல்வாரா? பக்தாஸ் கன்னம் ஜாக்கிரதை!

கோயில் என்றால் அங்கே கடவுள்தானே முக்கியம் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். கடவுளைவிட குருக்களே உயர்ந்தவர் என்பதற்கு சாட்சிதான் தீட்சதர் தர்ஷன்.


நடந்த சம்பவம் இதுதான். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த லதா என்பவர் ஆயங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸாக உள்ளார். இவர் தனது மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் கோவிலுக்கு சென்றார். 

தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்‌ஷனிடம் கூறினார். இந்த விவகாரத்தில் இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, கோயிலில் வைத்து நடராஜர் சாட்சியாக நர்சு லதாவை தர்ஷன் ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்தார்.

இதனால் காயம் அடைந்த லதா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சிதம்பரம் டவுன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். தர்ஷன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரை கைது செய்யவில்லை. 

இந்தநிலையில் பொது தீட்சிதர்கள் அவசர கூட்டம் செயலாளர் பாலகணேசன் தீட்சிதர் தலைமையில் நடந்தது. பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்‌ஷனை கோவில் பூஜை பணியிலிருந்து 2 மாதங்கள் சஸ்பெண்டு செய்தனர். மேலும் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே தீட்சிதரை கைது செய்யக்கோரி செவிலியர் சங்கம், மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தீட்சதர் தர்ஷனை உடனே கைது செய்யவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

அதுசரி, போராடினா நடவடிக்கை எடுப்பாங்களா என்ன..? ஒருவேளை நடராஜர் வந்து சாட்சி சொன்னால் போலீஸ் யோசிக்கலாம்.