குஷ்பு பா.ஜ.க.வில் தாக்கு பிடிப்பாரா ..? வாய்ப்பே இல்லையாம்.

குஷ்பு பா.ஜ.க.வில் இணைவதால் பா.ஜ.க. அமோகமாய் வளரப்போவதில்லை. ஆனால் குஷ்பு என்னும் துணிச்சல் நாயகியின் பிம்பத்துக்குத்தான் வீழ்ச்சி. அவரால், இந்த இயக்கத்துடன் தாக்குப்படிப்பதற்கு முடியாது என்று ஒரு கருத்தை எழுதியிருக்கிறார் சுகுணாதிவாகர்.


குஷ்புவைப் பொறுத்தவரை நூறுசதவீதம் கருத்தியல் தெளிவுள்ளவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அரசியலுக்கு வராத காலகட்டத்திலும் அதற்குப்பின் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் இருந்தபோதும் வகுப்புவாதச் சக்திகளுக்கும் ஆணாதிக்கச் சக்திளுக்கும் எதிரான குரலை உறுதியாக முன்வைத்தவர். தன்னை ஒரு நாத்திகர் என்றும் பெரியாரிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டே ஒரே நடிகை அவர்தான். ஆனால் பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் எல்லாமே தலைகீழாகியிருக்கிறது.

பிறப்பால் முஸ்லீமான குஷ்புவைப் பாஜகவினர் வசைபாடியபோது, 'சங்கிகளுக்கு நான் நக்கத் கான்' என்று .தன் அடையாளத்தை முன்வைத்து எதிர்கொண்டவர். இனி எப்படி அவர் பெண்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் ஆதரவாகப் பேச இயலும்?

மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்தநாளையொட்டி எழுதிய 'குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி' கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.

/குஷ்புவிடமிருந்து இப்போதைய தமிழ் சினிமாக்காரர்களும் தமிழக அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான நற்பண்புகள் இரண்டு. பொதுவாகத் தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடி வரும்போதுதான் அரசியலுக்கு வருவதும், அரசியலை விட்டு விலகி ஓடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பாக இருக்கிறது. ஆனால் குஷ்பு, கற்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது தனியொரு மனுஷியாகவே அதைச் சந்தித்தார். அவருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் சாதாரணமானவையல்ல. அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் அடைக்கலமாகி, அதை எதிர்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவர் அத்தனை பிரச்னைகளையும் சந்தித்து முடித்தபிறகுதான், தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பொதுவாக அரசியல்வாதிகள் ஒரு கட்சியைவிட்டு விலகிவிட்டால், முன்பு இருந்த கட்சியைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம். ஆனால் குஷ்புவோ தி.மு.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தபிறகும்கூட, இப்போதுவரை தி.மு.க குறித்து எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறாதவர். "கலைஞர் என் தந்தையைப் போன்றவர்" என்று சொல்லும் குஷ்பு ஸ்டாலின் மீதும் புகார்கள் கூறியதில்லை. லாவணிக்கச்சேரி நடக்கும் தமிழக அரசியல் சூழலில் குஷ்புவிடம் இருக்கும் இந்த நற்பண்பு, எந்த அரசியல்வாதியிடமும் காணக் கிடைக்காத ஒன்று./

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரை இப்போதும் சோனியாகாந்திக்கு அவர் மரியாதையாகத்தான் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இந்த இயல்பை எவ்வளவு காலம் அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. மேலும் காங்கிரஸில் அதற்கான சுதந்திரம் இருந்ததைப்போல் பா.ஜ.க.வில் இருக்கவும் வாய்ப்பில்லை. 

முதல் விஷயத்தைப் பொறுத்தவரை நிச்சயம் ஆதாயம் இல்லாமல் குஷ்பு பா.ஜ.க.வில் சேர வாய்ப்பில்லை. குஷ்புவின் கருத்தியல் சாய்வுகளுக்கும் மனப்போக்குக்கும் முற்றிலும் எதிரான கட்சி பா.ஜ.க. எனவே தனிப்பட்ட ஆதாயங்கள் காரணமாகவே அவர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கக்கூடும். தேசியளவில் அவருக்கு ஏதேனும் முக்கியமான பதவி கிடைக்கக்கூடும்.

தமிழகத்தில் இனி குஷ்புவுக்கு வளர்ச்சி என ஏதும் இருக்கப்போவதில்லை. பிஜேபியே வளராதபோது குஷ்பு மட்டும் என்ன தனியாக வளர்ந்துவிடப்போகிறார்? ஆனால் குஷ்புவின் இயல்புக்கு அவரால் பா.ஜ.க.வில் அதிக காலம் நீடிக்க முடியாது என்றே கருதுவதாக தெரிவித்துள்ளார்.