கைது செய்யப்படுவாரா கல்கி பகவான்? சந்திரபாபு நாயுடுவின் தோஸ்து என்பதுதான் காரணமாம்!

காவி உடை உடுத்தினாலே பா.ஜ.க.வின் பக்தர்கள் என்று சொல்லப்படும். அந்த வகையில் பா.ஜ.க.விற்கு பாபா ராம்தேவ், ஸ்ரீரவிசங்கர்ஜி, ஜக்கி வாசுதேவ் என பல சாமியார்கள் பாதசேவை செய்துவருகிறார்கள்.


அவர்களைப் போலவே ஆன்மிகப் பாதையில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் மட்டும் ஏன் திடீரென ரெய்டு என விசாரித்தபோதுதான், காவி கட்டியிருந்தாலும் அவர் சந்திரபாபு நாயுடுவின் நண்பராக இருந்ததுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய நாட்டைவிட்டே ஓடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட கல்கி பகவான் இன்று, ‘நான் இங்கேதான் ஆன்மிக வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறேன், வருமான வரித்துறையினர் அவர்களுடைய பணியை செய்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

யார் இந்த கல்கி பகவான். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரில் வரதராஜுலுவுக்கு மகனாகப் பிறந்த விஜயகுமார் என்பவர்தான் இன்றைய கல்கி பகவான். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த விஜயகுமார், அடுத்து லாரி ஷெட், எல்.ஐ.சி. ஏஜென்ட் என பல்வேறு தொழில் செய்து கடைசியாக ஆன்மிகக் கடை திறந்தார்.

சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை ஆரம்பித்து, மக்களைக் கவர ஆரம்பித்தார். தன்னையே கடவுள் என சொல்லிக்கொண்டு வலம்வந்த இவரின் ஆன்மிகச் சேவையில் வழக்கம்போல் அப்பாவி மக்களும் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்க்ளும், அரசியல்வாதிகளும் விழுந்தனர்.

அப்படி ஒருவராக விழுந்தவர்தான் சந்திரபாபு நாயுடு. அதன்பிறகு இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததுதான் மோடி அரசுக்குத் தெரியவந்தது. எதிரிக்கு நண்பன் என்றால் சும்மா விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டது. 

 20_க்கும் மேற்பட்ட இடங்கள், ஆசிரமங்களில் கடந்த மூன்று நாட்களாக நடத்திய ரெய்டின் முடிவில், 500 கோடி ரூபாய்க்கு சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கோடி ரூபாய் இந்திய பணமும், 21 கோடி அமெரிக்க டாலர் கரன்சிகள், 9 கோடி வைரங்கள், மேலும் 26 கோடி ரூபாய் மதிப்பிலான 95 கிலோ தங்க நகைகளும், 31 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் என கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கும் மேலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கல்கி, அவரது மனைவி பத்மா, அவரது மகன் கிருஷ்ணா, மருமகள், இவர்களது ஆடிட்டர் மற்றும் பினாமி பெயர்களில் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் ஹோட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள், ரியஸ் எஸ்டேட், உல்லாச கப்பல்கள், சிறிய சொகுசு ரக ஃபிளைட் என ஏகத்துக்கும் வாங்கிக் குவித்துள்ளனர்.

இதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் வில்லங்கம் காணப்பட்டால் கல்கி பகவானை கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டு ஜக்கியும் பாபா ராம்தேவும் அலர்ட் ஆகிவிடுவது நல்லது.