கக்கூஸ் கழுவவா நான் எம்.பி. ஆனேன்..? கொந்தளித்த பா.ஜ.க. பெண் சாமியார் பிரக்யா!

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பிஜேபி எம்.பி பிரக்யா சிங் தாகூர்.ஸ்டெப் கட்டிங்கும் காவி உடையுமாக கலக்கும் பிரக்யா சிங்கின் வாய் மிகவும் பிரபலம்.


தேர்தல் பிரச்சாரத்தின் போது மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்த்தர் என்று புகழ்ந்து ,மோடியே கண்டிக்கும் அளவுக்கு பரபரப்பானது.2008ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் என்.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்ட பிரக்யா இப்போதும் ஜாமீனில்தான் இருக்கிறார்.பிஜேபி தொண்டர் ஒருவர் சமீபத்தில் பிரக்யாவுக்கு ஃபோன் செய்து தனது பகுதி சுகாதார சீர்கேடு குறித்து புகார் செய்திருக்கிறார்.

நேற்று முன் தினம் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் தொண்டர்களிடையே பேசும்போது 'சாக்கடையை சுத்தம் செய்ய நான் இங்கு வரவில்லை, உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப் படவில்லை. எந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுக்க பட்டேனோ அந்த வேலையை நான் நேர்மையாக செய்வேன் என்று பொங்கி இருக்கிறார்.மோடி,தூய்மை இந்தியா என்ற பெயரில் சுற்றுப்புற சுகாதாரத்தை தூக்கிப் பிடித்திருக்கும் நிலையில் பிரக்யா வீசிய இந்த வெடி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால்,பிரக்யாவை  டெல்லியில் உள்ள பிஜேபி தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார்.பிஜேபியின் புதிய செயல் தலைவரான ஜே.பி நட்டா அவரது பேச்சு கட்சியின் கொள்கைகளுக்கும்,செயல் திட்டங்களுக்கும் முரணாக இருப்பதாக கண்டித்தாராம்.இதில் இருந்து என்ன தெரிகிறது? உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு  காவி உடை யோகி ஆதித்யநாத் முதல்வரானது போல,சக காவி பிரக்யா சிங் தாகூர் ம.பி மாநில முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது, என்று தெரிகிறது. அதாவது. என்.ஐ.ஏ வழக்கு சரியான பாதையில் போகாமல் இருந்தால்!