வரலாற்றில் இடம் பிடிப்பாரா எடப்பாடி..? திருச்சி தலைநகரம் ஆகுமா?

அடுத்து தமிழக முதல்வர் கொடுக்கும் அதிரடி அறிவிப்பு இதுதான் என்று அதிகாரவட்டம் தெரிவிக்கும் தகவல் என்ன தெரியுமா? தமிழகத்தின் தலைநகராக திருச்சியை அறிவிக்க இருக்கிறாராம்.


அதே நேரம் சென்னையும் துணை தலைநகரமாக தொடர்ந்து இருக்குமாம். அதாவது தலைமைச் செயலகம் மட்டும் திருச்சியில் இயங்குமாம். புதுப்புது அலுவலகம் மட்டும் திருச்சியில் தொடங்கப்படுமாம். இதன் மூலம் தென் பகுதி மக்கள் தலைநகரை அடைவது எளிதாக இருக்கும் என்பதுடன், வரலாற்றில் இடம் பிடிக்க முடியும் என்று நினைக்கிறாராம் எடப்பாடி.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், திருச்சியை தலைநகராக மாற்றுவதாக முடிவெடுத்து,. 1983ம் ஆண்டு திருச்சியை தலைநகராக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அறிவித்தார். ஆனால், எம்.ஜி.ஆரின் அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக தி.மு.க. கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், மத்திய அரசு போதிய ஆதரவு காட்டாத காரணத்தால், அதன்பிறகு அந்தத் திட்டம் குறித்துப் பேசப்படவே இல்லை. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் அதுகுறித்து எதுவும் திட்டமிடவும் இல்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் மீண்டும் இந்த பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கு காரணம், திருச்சி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரின் கோரிக்கைதான் என்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று எடப்பாடியாரின் நெருக்கமான அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

இப்படியெல்லாம் எப்படி செய்தி வருகிறது என்பதே புரியவில்லை. இருக்கின்ற பிரச்னையை எப்படி முடிப்பது என்பதுதான் எடப்பாடியின் எண்ணமே தவிர, புதிய பிரச்னைகளை உருவாக்குவது இல்லை என்கிறார்.

அதுவும் சரிதான்.