எட்டுவழிச் சாலையில் சிக்குவாரா எடப்பாடி? சேலத்தில் போலீஸ் கைவரிசை!

எட்டுவழிச் சாலையில் போட்டே தீருவது என்று எடப்பாடி முடிவுடன் நிற்க, போட விடவே மாட்டோம் என்று விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் மல்லுக்கட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல அதிர்ச்சித் தகவலை அள்ளிக்கொடுத்தனர். விவசாயிகள் நிலத்தை தாங்களே மனமுவந்து தருகிறார்கள் என்று பொய்க் கணக்கு காட்டுகிறார் எடப்பாடியார். நிலங்களுக்கு அருகே அ.தி.மு.க.வினரை நிற்கவைத்து, நில உரிமையாளர் என்று கணக்குக் காட்டி நிலங்களை எடுத்துக்கொள்வதாக சில வீடியோ ஆதாரங்களை வெளியிட்டனர்.

அதுதவிர, இந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு சென்னை வர இருந்த விஜயகுமாரை, காவல் துறை மூலம் கடத்தவும் ஏற்பாடு செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்குவார் என்பது இப்போதுதான் எங்களுக்குத் தெரிகிறது. அயோத்தியபட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் நேற்று மாலை தமிழக உளவுப் பிரிவு போலீசாரால் கடத்தப்பட்டிருக்கிறார். உண்மையை மிரட்டி அழிக்கப்பார்க்கிறார் எடப்பாடி. 

எடப்பாடியாரின் பொய்முகத்தை கிழிக்கும் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறோம். இப்போது விவசாயி முருகேசனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ, அயோத்தியபட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயகுமாரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ அதற்கு முழுப் பொறுப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் விஜயகுமாரை போலீஸார் விடுவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விரிவாக்கம் செய்யாமல், இந்த எட்டுவழி சாலையில் ஏன் எடப்பாடி இத்தனை உறுதியுடன் இருக்கிறார் என்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.