திங்கள் கிழமையாவது சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா! சி.பி.ஐ. பட்சி என்ன சொல்லுது?

இப்படியெல்லாம் நடக்குமா என்று ப.சிதம்பரம் யோசித்துக்கூட இருக்க மாட்டார். ஏனென்றால் அவர் நீதிமன்றங்கள் மீது பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். உயர்நீதிமன்றம் கைவிட்டாலும், உச்ச நீதிமன்றம் கைகொடுக்கும் என்று நினைத்தார்.


ஆனால், உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பு தரவில்லை என்பதாலே, அவர் சுவர் ஏறி கைது செய்யப்படும் சூழல் உண்டானது. இதையடுத்து சிதம்பரம் ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்கள் ப.சிதம்பரத்தின் கைது செய்யப்பட்டு விட்டதால், இந்த முன்ஜாமீன் தேவையில்லை என்று வாதிட்டார். இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்து,  முன் ஜாமீன் கோருவது அடிப்படை உரிமை என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை வரும் திங்கள் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவையும் அன்றைய தினம், அதாவது சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடியும் நாளான ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சி.பி.ஐ. இன்னமும் நிறைய விசாரணை செய்யவேண்டும் என்று வாதம் செய்துவருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது திங்களன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பது சிரமம் என்பதுதான் தெரிகிறது. இதற்கிடையில் அமலாக்கத் துறை வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கைதாகி உள்ளே உட்கார்ந்திருப்பவருக்கு எதுக்குப்பா முன் ஜாமீன் கொடுக்குறீங்க?