வரிச்சூர் செல்வம் எனும் வி.வி.ஐ.பி.க்கு அத்திவரதர் ஆதரவு கொடுப்பாரா? கடும் சிக்கலில் காஞ்சிபுரம் கலெக்டர்! மோடி வரும்போதாவது உஷாரா இருங்கப்பா!

எந்த பிரச்னையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அத்திவரதர் தரிசனத்தில், வரிச்சூர் செல்வம் பெரும் பரபரப்பை உருவாக்கிப் போய்விட்டார்.


பாதுகாப்பு ஓட்டை மட்டுமின்றி, தலைவிரித்தாடும் லஞ்சமும் இதனால் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அத்திவரதர் தரிசன விழாவுக்காக காஞ்சி நகர் மட்டுமல்ல காஞ்சி மாவட்டமே போலீசின் பாதுகாப்புப் பிடியில் இருக்கிறது. 6 எஸ்.பிக்கள், 2 டிஐஜிகள், ஒரு ஐஜி, 5 ஆயிரம் போலீஸார் காஞ்சி நகரம் முழுதும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டிதான் வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.

காஞ்சி டவுனில் ஏராளமான போலீஸ் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் பல மாவட்ட போலீசாரும் ஷிப்டு முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட போலீஸார் பலருக்கும் வரிச்சியூர் செல்வத்தைப் பார்த்தாலே அடையாளம் தெரியும். திமுக ஆட்சிக் காலத்தில் அழகிரிக்கும், பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கும் நெருக்கமாக இருந்த வரிச்சியூர் செல்வம் அதிமுகவிலும் தனக்கு நண்பர்களை வைத்திருந்தார்.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் பத்து பாஸ்கள் உண்டு. அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாஸ்கள் கொடுக்கப்படுகின்றன. எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்குதான் விவிஐபி பாஸ் கிடைக்கும் அந்த வகையில் வரிச்சியூர் செல்வத்துக்கு கலெக்டர் அலுவலகம் மூலமாகவே விவிஐபி பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. வரிச்சியூர் செல்வம் என்று போடாமல் செல்வம் என்ற பெயரிலேயே பாஸ் கொடுத்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் கலெக்டராக இப்போது இருக்கும் பொன்னையா மதுரைக்காரர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே மதுரை வட்டார தொடர்புகள் மூலமாகத்தான் வரிச்சியூர் செல்வத்துக்கு விவிஐபி பாஸ் கிடைத்திருக்கிறது. 

இந்த விவகாரம் இப்போது வில்லங்கமாகி வருகிறது. தன்னுடைய பாஸை எடுத்து யாரோ கொடுத்துவிட்டார்கள் என்ற ரீதியில் கலெக்டர் கதை சொல்லி வருகிறாராம். எப்படியிருந்தாலும் இரண்டு நாளில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். இப்போதே சுதாரிக்கவில்லை என்றால், மோடி வரும்போது அவருடன் நாலைந்து ரவுடிகளும் தரிசனம் செய்யும் நிலைமை ஏற்படலாம்.