பஞ்சமி முறைகேட்டுக்காக மு.க.ஸ்டாலின் பதவி விலகுவாரா..? கேள்வி எழுப்பும் ஜி.கே.மணிக்கு வன்னியர் அறக்கட்டளை முறைகேடு தெரியுமா?

பஞ்சமி நிலத்தை தி.மு.க. அபகரித்துவிட்டது என்று வன்னியர் வாரிய சொத்துக்களை அபகரித்த பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பட்டா இருக்கிறது என்று சொன்ன ஸ்டாலின், இப்போது அது வாடகைக் கட்டிடத்தில் இயங்குவதாகச் சொல்வதை எதிர்த்து ஜி.கே.மணி கொந்தளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முரசொலி அறக்கட்டளையும் இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல; அந்த நிலத்தில் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இயங்குகிறது என்று தட்டிக்கழித்து விட்டு தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது புதிய பூசாரி ஒருவரை நியமித்து ஒன்றுக்கும் உதவாத வாதங்களை விளக்கங்களாக வழங்கச் செய்துள்ளார்.

முரசொலி பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டை மருத்துவர் அய்யா அவர்கள் முன்வைத்த போதே அதுகுறித்த உண்மையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது என்றால் அப்போதே அதை தெரிவித்து இருக்கலாம். மாறாக வீராவேசமாக முரசொலி நிலத்திற்கான பட்டாவை வெளியிட்டார் ஸ்டாலின். வாடகைக்கு இருக்கும் ஒருவர் எப்படி இன்னொருவர் நிலத்திற்கான பட்டாவை வெளியிட முடியும்?

முரசொலி நிலத்திற்கான பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிடுவாரா? என்று மருத்துவர் அய்யா அவர்கள் வினா எழுப்பி 100 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை மூலப் பத்திரத்தை ஸ்டாலின் வெளியிடவில்லை. முரசொலி நிலம் மீதான பழியை உரிய அதிகாரம் படைத்த அமைப்பிடம், உரிய காலத்தில் நிரூபித்து துடைப்பேன் என்று கூறினார். ஆனால், இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியிருக்கிறாரே.... இது தான் அரசியல் நேர்மையா?

சாஸ்திரிபவனில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை. எங்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு இன்றுடன் முடிந்து விட்டது’’ என்று கூறினார். உள்ளுக்குள் நடந்த விசாரணையில் அது வாடகை நிலம் என்று கூறிவிட்டு, வெளியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதை மறைத்துப் பேசுவது பித்தலாட்டமா.... இல்லையா? இது தான் திமுகவின் அரசியல் நேர்மையா?

முரசொலி விவகாரத்தில் கடந்த 3 மாதங்களில் இத்தனை முறை நிலைப்பாட்டை மாற்றிய திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன அரசியல் நேர்மை இருக்க முடியும்? முரசொலி நிலம் தொடர்பாக வெளியில் ஒரு நிலைப்பாடு, உள்ளுக்குள் ஒரு நிலைப்பாட்டை திமுக கடைபிடித்து வருவது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

இத்தகையவர்கள் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து என்பதாலும், முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதாலும், அவரே விடுத்த சவாலின்படி அரசியலில் இருந்து விலக வேண்டும். அதற்கான தேதியை புதிய பூசாரி டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ஜி.கே.மணி.