டெல்லி பல்கலை வன்முறைக்கு பொறுப்பேற்பாரா அமித் ஷா? எங்கே போனார் அரவிந்த் கெஜ்ரிவால்?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் துணைவேந்தர் மற்றும் போலீசாரின் அனுமதியோடு ஆதரவோடு நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் கம்பிகளால் கற்களால் தாக்கி உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


முகமூடி அணிந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் தலைவர் உட்பட 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமான ஏபிவிபி குண்டர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். 

இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கல் என்றால், அத்தனை எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால், குண்டர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று மாணவ அமைப்புகள் போராடுகின்றன. 

கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களை திரும்பப் பெறவேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் உள்ளே நுழைந்தவர்கள் மாணவர் தலைவர்களைத் தேடிப் பிடித்தும், ஆதரவான ஆசிரியர்களை கண்டுபிடித்தும் தாக்கியுள்ளனர்.

டெல்லிக்கு முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், இத்தனை பெரிய நிகழ்வுக்குப் பிறகும் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. போலீஸ் துறை அவருடைய கையில் இல்லை என்றாலும், மாணவர்களுக்கு ஆதரவாக அவர் நின்றிருக்க வேண்டும்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால், மாணவர்கள் இப்போது குடியுரிமை போராட்டத்தை முன்பைவிட தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். அனுமன் இட்ட தீ போன்று குடியுரிமை சட்டம் பொசுங்கும் வரை பிரச்னை தீராது.