வீட்டுக்குள் கணவனுக்கு சவக்குழி..! மகன், மகளுடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய பயங்கரம்! சாத்தூர் மர்மம்!

விருதுநகர் அருகே கணவரை மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், சுரேஷ் எனும் மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். சுப்புராஜ் கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுப்புராஜன் சகோதரர் தொடர்ந்து பிச்சையம்மாளிடம் எங்கே சென்றார் என கேட்டதற்கு தொடர்ந்து முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சகோதரர் வீட்டை நோட்டம் இடுகையில் அங்கு புதிதாக தோண்டப்பட்டு மூடியிருந்த குழி ஒன்று தென்பட்டது.  

இதுகுறித்து சுப்புராஜின் சகோதரர் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சுப்புராஜின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் சந்தேகப்பட்ட இடத்தை தோண்டிப் பார்க்கையில் எலும்புத்துண்டுகள் கிடைத்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.  

மேலும் தாசில்தார் முன்னிலையில் தோண்டத் துவங்கினர். அப்போது காணாமல் போனதாக பிச்சையம்மாள் மற்றும் குடும்பத்தினர் ஆடிய நாடகம் அம்பலம் ஆனது. மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாகவும் மிகவும் ரகளையில் ஈடுபட்டதால், சுரேஷ் மற்றும் பிச்சையம்மாள் இருவரும் அவரை அடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது அவர் மயங்கி இருக்கலாம் அல்லது இறந்து இருக்கலாம். இதனை மூடி மறைக்க இவர்கள் வீட்டின் உள்ளே குழிதோண்டி புதைத்து இருக்கின்றனர் என்ற தகவல்கள் தெரியவந்ததால், பிச்சையம்மாள், சுரேஷ் மற்றும் பிரியா மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  

கணவனை கொலை செய்து வீட்டினுள்ளேயே புதைத்த சம்பவம் சாத்தூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.