இப்படி பண்ணலாமா அஸ்வின்..? வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களை தனி ஒருவனாக வதம் செய்த ஜாஸ் பட்லரை, தந்திரமாக அவுட்டாக்கிய பஞ்சாப் கேப்டன் அஸ்வினை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


ஐ.பி.எல் 12வது சீசனின் நேற்றைய போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 79 ரன்களும், இளம் வீரர் சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினாலும், மறுமுனையில் ஜாஸ் பட்லர் தனி ஒருவனாக பந்துவீச்சை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்.

ஜாஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்ற பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட அனைத்து வியூகங்களும் தோல்வியில் முடிந்த நிலையில், போட்டியின் 12வது ஓவரை வீசிய அஸ்வின், அந்த ஓவரின் 5 வது பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எல்லைக் கோட்டில் இருந்த ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர், க்ரீஸை விட்டு வெளியே இருந்ததால், அவரை “மன்கட் அவுட்”(ரன்அவுட்) செய்தார் அஸ்வின்.

அஸ்வின் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய விதம் கிரிக்கெட் விதிமுறைக்கு எதிரானது இல்லை என்றாலும், கிரிக்கெட்டை நேசிக்கும் யாராலும் அஸ்வினின் இந்த செயலை ஏற்று கொள்ள முடியாது என்பதை சமூக வலைதளங்கள் மூலம் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

நான் செய்தது விதிமுறைக்கு எதிரானது இல்லை, பேட்ஸ்மேன் தான் கவனமாக இருக்க வேண்டும் என அஸ்வின் தனது செயலை நியாயப்படுத்தினாலும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வின் கிரிக்கெட் விளையாட்டிற்கே மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அஸ்வினின் இந்த செயல் முறையானது இல்லை என தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.