ஸ்டாலின் ஏன் லண்டன் போகிறார் தெரியுமா? கொளுத்திப் போட்ட எடப்பாடி! நழுவி ஓடிய ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் போகிறார் என்று சொல்லப்படுவதை, வேறு விஷயத்துக்காகப் போவதாக ஸ்டாலின் சொல்கிறார்.


அதேபோன்று, ஸ்டாலின் அடிக்கடி லண்டன் போவது எதற்குத் தெரியுமா என்று எடப்பாடி புதிர் போடுகிறார். இந்த விவகாரத்தில் நமக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. அதாவது, அவர்கள் இருவரும் எதற்காக போகிறார்கள் என்பது, அவர்கள் இருவருக்குமே தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், மக்களைத்தான் குழப்புகிறார்கள்.

இப்போது ஸ்டாலின் மீண்டும் எடப்பாடிக்கு அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதோ, அந்த அறிக்கை. “தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்” என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்லும் முன்பு இன்று பேட்டியளித்திருப்பது 'கேழ்வரகில் நெய் வடிகிறது, கேளுங்கள்' என்ற நமது நாட்டுப்புற முதுமொழியைப் போல போலிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது 'முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2015 செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதி ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.

பிறகு, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சரான பிறகு 'இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2019 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒருபடி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை! முதலீடு அறிவிப்புகள் கானல் நீராகிவிட்டது. வெற்று விளம்பரச் செலவுதான் மிச்சம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிலதிபர்களிடம் இந்த முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? அதுவும் இல்லை.

'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?' - என்பது போல் முதலீடுகள் வரவில்லை. இங்கே சட்டி உடைந்துவிட்டது; அகப்பை முறிந்துவிட்டது. அதனால் முதலமைச்சருக்கு வெள்ளை அறிக்கை வெளியிடும் துணிச்சல் வரவில்லை. “முதலீடுகள் பெறுவதற்குச் செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? “என்று கேட்டிருக்கிறார் முதலமைச்சர். நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. மணிகண்டன், தொழில்துறை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு. பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுடன் 'படை, படையாக' வெளிநாட்டிற்கு, ரத கஜ துரக பதாதி போல், அரசு செலவில் சென்றார்கள்.

“உலக முதலீட்டாளர்களைக் கவருவதற்காக நாங்கள் செல்கிறோம்’’ என்று அறிவித்தார்கள். அப்போதே முதலமைச்சரும் போயிருந்தால் - அது வேறு விஷயம். ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலமைச்சர் வெளிநாடு போவது ஏன்? இதுதான் என் கேள்வி.

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை திரு. எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் கடைசி வரை எதற்காக வெளிநாடு செல்கிறோம் என்பதை மட்டும் ஸ்டாலின் சொல்லவே இல்லை.