இந்து மதத்தில் இருந்து ஏன் வெளியேற வேண்டும்? அம்பேத்கர் சொன்னது இதுதான்! அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை!

இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைவது குறித்த தன் முடிவை அண்ணல் அம்பேத்கர் 1936-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டமொன்றில், வெளிப்படுத்துகிறார்.


தன்னோடு, இதர மஹர் இன மக்களும் மதம் மாற வேண்டிய கட்டாயம் குறித்து அவர் உரையாற்றுகிறார். அந்த உரை மிகவும் கவித்துவமான உரையாக இருந்தது. 'முக்தி கோன் பதே?' (முக்தி அடைவதற்கான வழி என்ன?) என்ற தலைப்பில், மராத்தியில் எழுதப்பட்ட அந்த உரையை, இந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார் இலியனார். அதனை தமிழில் வினோத்குமார் மொழி பெயர்த்துள்ளார். 

மதம் என்பது மனிதனுக்காக. மனிதன் மதத்துக்காகப் பிறக்கவில்லை. நீங்கள் சுயமரியாதையுடன் இருக்க, மதம் மாறுங்கள். ஒத்துழைப்பு நல்கும் சமுதாயத்தை உருவாக்க, மதம் மாறுங்கள். அதிகாரம் கிடைக்க, மதம் மாறுங்கள். சமத்துவம் கிடைக்க, மதம் மாறுங்கள். சுதந்திரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.

மகிழ்ச்சி தரும் உலகம் படைக்க, மதம் மாறுங்கள். உங்கள் மனிதத்தை மதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? உங்கள் தாகத்துக்கு நீர் தராத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

உங்கள் கல்விக்குத் தடையாக இருக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? உங்களுக்கு நல்ல பணி கிடைப்பதைத் தடுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? உங்களை ஒவ்வொரு விஷயத்திலும் அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? மனிதர்களுக்கிடையில் மனிதநேயத்தைத் தடுக்கும் ஒரு மதம், மதமல்ல. அபராதம்.

மனிதனின் சுயமரியாதையைப் பாவமாகக் கருதும் ஒரு மதம், மதமல்ல. நோய். செத்த மிருகத்தைத் தொடலாம் ஆனால் மனிதனைத் தொடத் தடை விதிக்கும் ஒரு மதம், மதமல்ல. பைத்திய நிலை. ஒரு சாதி மட்டும் கல்வி கற்கக் கூடாது, பொருள் சேர்க்கக் கூடாது, ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறும் ஒரு மதம், மதமல்ல. மனித வாழ்வை கேலிக்குட்படுத்துவது.

கல்லாதவர் கல்லாதவராகவும், ஏழை ஏழையாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று போதிக்கும் ஒரு மதம், மதமல்ல. தண்டனை. சொல்லாதே: மனிதர்களை விட மிருகங்களை மதிப்பவர்களை, பார்ப்பனர்களைக் கடவுளாக மதிப்பவர்களை, பக்திமான்கள் என்று. சொல்லாதே: எறும்புகளுக்குச் சர்க்கரையையும், மனிதர்களுக்குத் தாகத்தையும் வழங்குபவர்கள், பக்திமான்கள் என்று. சொல்லாதே: தன்னுடைய மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுபவர்களை, சமுதாயத்தை வெறுப்பவர்கள் என்று.