கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட வரதராஜனை கைது செய்ய இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டென்ஷன் ஆகிறார்!

இன்று சென்னையில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தெரிந்த ஒரு தகவலைத்தான் வரதராஜன் வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதாவது, கொரோனா பாதிக்கப்பட்ட நண்பரை மருத்துவமனைகள் அட்மிட் செய்து கொள்ளவில்லை என வரதராஜன் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.


ஒரு நல்ல அரசாக இருக்கும் பட்சத்தில், வரதராஜன் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அவர் நண்பரை அட்மிட் செய்ய மறுத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேன்டும். ஆனால், இதுதான் கூறுகெட்ட அரசாக இருக்கிறதே. அதனால் குற்றம் கூறிய வரதராஜனை கைது செய்ய இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டென்ஷன் ஆகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுபவனை மடியில் வைத்துக்கொண்டு, அமைச்சர் மீது புழுதிவாரி தூற்ற வேண்டுமென்று வரதராஜன் என்ன வரமா வாங்கி வந்திருக்க போகிறார்? அப்படி இருக்கப்போவதில்லை.அவரின் அந்த கோபத்தில்,அந்த கண்ணீரில் ,அந்த நெகிழ்ச்சி மிகு பதிவின் வலிக்கு ஒத்தடம் கொடுங்கள்.அப்படியல்லாமல் கொரோனா கொள்ளையிடும் மருத்துவமனைகளின் கஜானாக்களுக்கு சாமரம் வீசுவதைப்போல் பேசிக்கொண்டிருப்பது ,அம்மாவின் விவேக வியர்வையில் வளர்ந்த அஇஅதிமுக வின் உயிர் தொண்டர்களை அசூயை கொள்ள வைத்துவிடும். 

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவின் பதிவு இது. சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவரும் பிரபல நாடகநடிகருமான வரதராஜன்அவர்கள் மீது நான்கு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக விசாரணை தொடங்கி விட்டதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன.

இது மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. வரதராஜன் தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவு செய்ததுடன் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். 

இதைவிட மிக மோசமாக கடுமையாக எதிர்க்கட்சியினரும், டி வி விவாத பங்கேற்பாளர்களும் விமர்சித்து வருவதை அனைவரும் அறிவோம் . குறிப்பாக இணையதளங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை நேரடியாக விமர்சித்தே பல பதிவுகள் வருகின்றன. இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தங்களுடைய கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிடும் முதலமைச்சரும் அமைச்சர் பெருமக்களும் அதே பெருந்தன்மை உணர்வுடன் வரதராஜன் விஷயத்திலும் நடந்து கொள்ளவேண்டும். அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.