தமிழ்நாட்டு போலீஸ்க்கு என்னப்பா ஆச்சு? இன்னமும் சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமான ஜெயகோபாலை கண்டுபிடிக்க முடியலை?

ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்து திருடும் பஹாரியா கும்பல், பஹ்ரியா கும்பல் போன்ற வழக்குகளை எல்லாம் திறமையாக கையாண்டு, பிடித்துக்கொண்டுவருவதில் தமிழக போலீஸ்க்கு இணையே இல்லை.


ஆனால், ஏனோ எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா, ஜெயகோபால் போன்றவர்களை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கும் பதிவு இது.

-இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை, பெண் இஞ்சினியர் சுபஸ்ரீ சாவுக்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை. 15 நாட்களாக போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடிவிட்டார்களாம்! ஆகவே பூட்டப்பட்டிருக்கும் அவரது வீட்டு கதவின் மீது நோட்டீஸ் ஒட்டிவிட்டார்களாம்!

அவர் மீது கொலையாகாத பிரிவின் கீழ் வழக்கு பதிந்து உள்ளார்களாம்! அப்படியெனில், போலீசாரைப் பொறுத்த அளவில் சுபஸ்ரீ இன்னும் சாகவில்லை. ஜெயகோபால் தலைமறைவு தொடர்பாக அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை செய்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டடைய முடியவில்லை.! என்கிறது காவல்துறை!

இன்னும் ஆளும் கட்சியின் அப்பகுதி நிர்வாகியாகத் தொடரும் ஜெயகோபாலைப் பிடிக்க ஒரு எளிய வழி இருக்கிறது.!

தன்னுடைய டிவிட்டரில் சுபஸ்ரீ மரணத்தையும் பொருட்படுத்தாமல், ஜெயகோபால் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை, குறிப்பாக ஜெயகோபாலோடு இருக்கும் படங்களை பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்த ஓ.பி.எஸ். அவர்கள், ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே காவல் நிலையத்திற்கே why வந்த சரணடைந்து விடுவாரே ஜெயகோபால்! அல்லது இபிஎஸ் ஆவது சொல்ல வேண்டும்!

ஓட்டு மொத்த தமிழக மக்களை மட்டுமல்ல,உலக முழுமையும் உள்ள தமிழ் நெஞ்சங்களை உலுக்கிப் போட்ட ஒரு சாவு விஷயத்தில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஆளும் தரப்பு ஒரு குற்றவாளியை மறைத்து வைத்துக் கொண்டு மக்கள்,காவல் துறை, நீதிமன்றம்....என அனைத்து தரப்பையும் ஏமாற்றிக் கொண்டு, இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அமைச்சரவையே களத்தில் இறங்கி ஓட்டு கேட்கப் புறப்படவிருக்கிறது!

யார் என்ன செய்ய முடியும்..! இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோருடன் ஜெயகோபாலும் பவனி வருவாரோ என்னவோ..?

இதனிடையே ஒரு வழியாக ஜெயகோபாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.