எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் திடீர் நன்றி... ஏன் தெரியுமா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப்பேசினார். அப்போது நா.த.கட்சியின் சார்பில் அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ததற்கும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தியதற்கும் அவர்கள் முதலமைச்சரிடம் நன்றிதெரிவித்துக்கொண்டனர்.  

கோரிக்கைகள் என்னென்ன?          

தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவனும், தமிழர் இறைவனுமான தமிழ்ப்பெரும் மூதாதை முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை (பிப்ரவரி 08, தை 20) அரசுப் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களும் முன்வைத்திருக்கிற கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி உறுதியாக நின்றிட்ட எழுவர் விடுதலைக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் 161வது சட்டப்பிரிவின்படி, ஒருமித்த தீர்மானம் இயற்றி, பின்னர் அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி ஓராண்டைக் கடந்தும் அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. எனவே தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் தந்து உடனடியாக எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி, உலகத்தமிழர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற வேண்டும்.  

இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ-கார்பன் எடுத்தல், மீத்தேன் எடுத்தல், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய்களைப் பதித்தல் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்கொடியத் திட்டங்களைக் கைவிடவேண்டும் எனவும், அப்போராட்டக்களத்தில் பங்காற்றிய மண்ணுரிமைப் போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற மிகையில்லாப் புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும், உலகின் மிக நீண்ட சமவெளி பகுதியைக் கொண்ட, தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம்’ காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

உலகிலேயே மூத்த மொழியான தமிழ்மொழிக்கு, தமிழகக் கோயில்களில் முழங்க இருந்துவரும் தடையை நீக்கி, தமிழகக் கோயில்களின் வழிபாட்டு மொழியாகத் தமிழையே முதன்மைத்துவம் பெறச் செய்ய வேண்டும் எனவும், 'இந்துசமய அறநிலையத்துறை' என்பதனை 'தமிழ்ச் சமய அறநிலையத்துறை'’ எனப் பெயர் மாற்றி அறிவிக்கவேண்டும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவினையும், அதன் நீட்சியாக உள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தமிழக அரசு நிராகரிக்கக் கொள்கை முடிவெடுத்து, தமிழகச் சட்டமன்றத்தில் அதற்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.  

தாய்த் தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களின் நல்வாழ்வினையும், வாழ்வாதாரத்தினையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.