ரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இதுவும் பா.ஜ.க.வின் திட்டம்தானா?

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பணிவோடு சொல்லிக்கொள்கிறேன் என்று ரஜினி பேசிய விஷயத்துக்குப் பின்னாலும் பா.ஜ.க. இருப்பதாக தொல்காப்பியன் எழுதியிருக்கிறார்.


ஐந்து நாட்களுக்கு முன்னால் துக்ளக் மேடை ஒன்றில் ரஜினி பேசுகிறார். அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பெரியாரையும் குறை சொல்லுகிறார். அந்தப் பின்னணியில் ‘சோ’ ராமசாமியின் உயர்வு குறித்து பெருமைபட பேசுகிறார். வெறும் அவதூறு வகையில் ஆன அவரது அந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. ரஜினி தனது கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமிழகத்தின் பொது மனசாட்சி வேண்டுகோல் வைக்கிறது.

இதுநாள் வரை அமைதியாக இருந்த ரஜினிகாந்த் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டின் மரக்கேட்டின் முன்னால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். பத்திரிகையாளர்களிடம் சில செய்தித் தாள்களைக் காட்டி, ’நான் படித்ததையும் கேள்விப் பட்டதையும்தான் சொன்னேன். எனவே நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்றார்.

ரஜினி, அவருடைய பேச்சுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு இருக்கிறார். ரஜினி தவறாக பேசி விட்டார்; அவருக்கு விபரம் தெரியாது; சில தேச விரோத சக்திகளின் இச்சைக்கு பலியாகி விட்டார் என்று இதுவரை கருதிக் கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம், ரஜினிகாந்த் பதில் அளித்து இருக்கிறார். ‘நான் என்னுடைய பேச்சை நானே திட்டமிட்டுதான் பேசினேன். என்னுடைய கருத்துக்கு வேறு யாரும் பொறுப்பு’ அல்ல என்று தெளிவாக சொல்லி விட்டார்.

இதற்கு பின்னால் இருக்கும் யோசனை என்னவாக இருக்கும்? தவறு என்று வந்தால் வருத்தம் தெரிவிக்கலாம்; அந்தத் தவறு, ரஜினி என்கிற தனி மனிதர் மட்டுமே சம்பத்தப்பட்டது என்றால் மன்னிப்பே கேட்டுவிடலாம். இது தவறு அல்ல; தப்பு. அதுவும் திட்டமிட்டு பேச வைக்கப்பட்ட தப்பு. அதுவும் ‘துக்ளக்’ குழும நிர்வாகிகளாகவும் காவிச் சிந்தனையாளர்களாகவும் இருக்கின்ற கூட்டத்தால் திட்டமிட்டு செய்யப்பட்ட தப்பு; நிரூபிக்கப்பட்ட குற்றம். இந்த இடத்தில் மன்னிப்புக் கேட்பதைவிட கேட்க மறுப்பதே சரியான முடிவாகும். அதைத்தான் ரஜினி செய்து இருக்கிறார்.

எப்படி? மன்னிப்புக் கேட்பதால் என்ன நடந்துவிடப் போகிறது. ரஜினிக்கு மட்டும் இல்லாமல் காவிக் கூட்டத்துக்கும் அல்லவா இழிவு ஏற்படும். அப்படி மன்னிப்புக் கேட்டுவிட்டால் மட்டும் என்ன ரஜினியையும் காவிகளையும் தமிழகம் போற்றவா போகிறது. எனவே, மன்னிப்புக் கேட்க முடியாது என்று சொல்லி விட்டால் வழக்கம்போல கொஞ்ச நாள் தமிழகம் கூச்சல் போடும். பிறகு அந்த அலை ஓய்ந்து விடும். இதுதான் குருமூர்த்தி கும்பலின் திட்டம்.

தமிழகத்துக்கும் தமிழகத்தின் விரோதிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் ரஜினி தமிழ்தேச விரோதிகளின் பக்கம் நின்று கொண்டு இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

ராஜா, சேகர், குருமூர்த்தி, ரஜினி இவர்களுக்கு மைக்குகளும் ஒலி பெருக்கிகளும் ஏராளமாக கிடைக்கும். மேடைகளும் வெளிச்சமும் தாராளமாக கிடைக்கும். அரசியல் ஆதரவும் காவல்துறையின் பக்க பலமும் நிறைய இருக்கும். ஆனால், தமிழ்ச் சமூகம் மட்டும் அவர்களுக்கு வாய்க்காது. அவர்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள்; இவர்கள் அனைவரும் ஏற்கெனவே புறக்கணிக்கப் பட்டவர்கள்.

இவர்களிடம் இருக்கும் சில சுவாரஷ்யங்களுக்காக இவர்களை இன்னும் ஆட வைத்து ரசித்துக் கொண்டு இருக்கிறது தமிழ்ச் சமூகம். தங்கள் எதிரிகளை கூத்தாட வைத்து பார்த்து சிரிப்பது தமிழனின் இயல்பு. எனக்கு தமிழ் சமூகத்தின் சமூக மன நிலையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உண்டு! தமிழன் என்றைக்கும் தனது மாண்பை விட்டுக் கொடுக்க மாட்டான்!