இஸ்லாமியர் போராட்டத்தில் ஏன் இந்துக்கள் இல்லை..? கேட்கவேண்டிய கேள்வி

சென்னை, வண்ணாரப்பேட்டையில் 19வது நாளாக போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது.


தினம் ஒரு தலைவர் இந்த போராட்டத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடுகின்றனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், அங்கே போய்விட்டு வந்த அனுபவத்தை பதிவாக எழுதியிருக்கிறார். வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏவிற்கு எதிரான போராட்டக் களத்திற்கு சென்று வந்தேன்.

குறுகலான அந்த தெருக்களில் குழந்தைகளுடன் இஸ்லாமியப் பெண்கள் நாளெல்லாம் கமிட்மெண்ட்டோடு,அதுவும் 18 நாட்களாக உட்கார்ந்து போராடுவதை பார்த்து வியந்தேன்! என்ன தான் போராட்டமென்றாலும் நாமெல்லாம் ஒரு முழுநாள் உட்கார்ந்துவிட்டாலே சலிப்படைந்து விடுகிறோம். ஆனால், அவர்கள், குடும்பத்தில் எத்தனை பிரச்சினைகள்,கடமைகள் இருக்க..

அதையெல்லாம் எடுத்து வைத்துவிட்டு, உட்கார்ந்து கோஷமிடுகிறார்கள் என்றால், அது சாதரணமானதல்ல! ஆனால்,இந்த மாதிரி போராட்டங்களை முழுக்க,முழுக்க முஸ்லீம்கள் மட்டுமே தான் நடத்த வேண்டுமா? என்ற கேள்வியும்,அப்படியே முஸ்லீம்களே நடத்தினாலும் அதில் இந்துக்கள் ஏன் பத்து சதமானவர்கள் கூட பங்களிப்பதில்லை என்றும் யோசித்தேன்!

ஆனால் போராட்டக்காரர்களை வாழ்த்தி பேச மட்டும் இடைவிடாது பல இயக்கத்தை சார்ந்தவர்களும் வருகின்றனர். ஆனால், ஏன் இஸ்லாமியர் அல்லாதவர்கள் ’’குறைந்தபட்சம் ஒரு நாள் முழுக்க’’ என்ற அளவிலேனும் நாளொன்றுக்கு ஒரு பத்து பேர் வீதம் அவர்களுடன் அமர்ந்தால் தானே அது ஆத்மார்த்தமான ஆதரவாக இருக்க முடியும்?

ஆனால், நாமெல்லோரும் ஏன் பார்வையாளர்களாக,வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களாக இருக்கிறோம் என நினைத்துப் பார்த்த போது தான் ஒரு உண்மை பட்டவர்த்தனமாக தெரிந்தது. ’’நாமெல்லாம் இந்து தானே எப்படியும் அரசாங்கம் நம்மை கைவிடாது தானே’ என்று நினைக்கிறோமோ என எனக்குத் தோன்றியது!

ஆனால், அப்படி நினைத்தால் அது மூட நம்பிக்கை!  காரணம், அஸ்ஸாமில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களில் ஒன்பது லட்சம் பேர் இந்துக்களே! அது போல பாஜக அரசாங்கத்திற்கு பிடிக்காததிமுகவினர்,கிறிஸ்த்துவர்கள்,தலித்துகள்,பெரியாரிஸ்டுகள்,கம்யுனீஸ்டுகள்ஞ்எனப் பலதரப்பட்டவர்களும் குடியுரிமைக்காக அலைகழிக்கப்பட வாய்ப்புண்டு!

ஆகவே, வெளியில் இருந்து வாழ்த்துவதோடு, பங்கேற்பாளர்களாக நாமும் மாற வேண்டும்! சென்னை அயனாவரத்தில் ஏழு இடதுசாரித் தோழர்கள் கடந்த ஆறு நாட்களாக காலவரையற்ற வகையில் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள் சிஏஏவிற்கு எதிராக! ஆனால், ஊடக கவனம் அவர்கள் மீது விழவில்லை!

இதற்கிடையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியில்லாத போராட்டத்தை ஏன் முடித்து வைக்காமல் விட்டுவைத்திருக்கிறீர்கள்? என டிஜிபியிடம் கேள்வி எழுப்பியுள்ளது!

மாற்றுக் கருத்துகளை பேசுவதும், பாதிக்கப்படுகையில் போராட்டம் நடத்துவதும் அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை ஜனநாயக உரிமை! அந்த ஜனநாயக உரிமையை பாதுகாத்து தர வேண்டிய நீதிமன்றமே, அதை பறித்திட சொல்லி நிர்பந்திப்பதை என்னென்பது?

இதே போல தில்லி போலீஸ் வன்முறையாளர்களுக்கு துணை போவதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்று ஒருவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதியவர்கள், ’’எங்கள் மீது எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே, அதுஅதற்கான நிர்வாகங்கள் தாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.., நாங்கள் எவ்வளவு தான் சொல்ல முடியும்ஞ்? என, பாதிக்கபட்டவர்களின் வழக்கறிஞர்களிடம் சொல்கிறார் என்றால்...

இந்த நாடு எப்படிப்பட்ட ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள இதைவிட சிறந்த உதாரணம் வேறில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.