அமிதாப்புக்கு மட்டுமா? ஏன் மோடிக்கு சிறந்த நடிகர் விருது இல்லை? டென்ஷன் ஆகும் நெட்டிசன்!

அமிதாப் பச்சனுக்கு திரையுலகில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது அநியாயம் என்று பொங்குகிறார் நெட்டிசன் மணிமாறன். அவரது பதிவை படித்துப் பாருங்கள்.


மோடி மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. நாள் தவறாமல் அவரை விமர்சித்தும் வருகிறேன். ஆனால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மோடிக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை என்னாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

படப்பிடிப்பில் நடிப்பதற்கு முன்பாக பலமுறை ஒத்திகை பார்க்க முடியும். நடிக்கும்போது தவறு நிகழ்ந்தால் ரீ-டேக் போக முடியும். இதெல்லாம் சினிமாவில் சாத்தியம். ஆனால் அரசியல் மேடை?

அங்கே ’ஆன் தி ஸ்பாட் பெர்பாமென்ஸ்’ காட்ட வேண்டும். இதில் மோடியை அடித்துக்கொள்ள இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? எந்த சூழ்நிலையிலும், ஆண்டவனே பக்கத்தில் இருந்தாலும் கேமரா கோணத்தை விட்டு கொஞ்சமும் விலகாமல் ’திறமை’ காட்டுவதில்...அவருக்கு இணை யாருண்டு?

அழுகை, ஆவேசம், வீரம், சோகம் என நொடிப் பொழுதில் நவரசங்களை வெளிப்படுத்துவதில் அவர் இன்னொரு சிவாஜி! ‘’பணமதிப்பு நீக்கம் வெற்றிபெறாவிட்டால் நடுத்தெருவில் வைத்து என்னை உயிரோடு எரித்து கொல்லுங்கள்’’ என மோடி வெளிப்படுத்திய ஆவேசமும்....

‘’டீச்சர் என்னை கிள்ளிட்டான்’’ என அலறும் பள்ளிச் சிறுவன் போல, கடந்த தேர்தலின்போது ‘’ ராகுல் என்னை ஜாதியைச் சொல்லி திட்டிட்டாரு’’ என்கிற மோடியின் காமெடி கதறலும்...அவர் நடிப்புத் திறமைக்கு சாம்பிள்கள்.

இவ்வளவு திறமை மிக்க மோடியை விட்டுவிட்டு அமிதாப்புக்கு ’தாதா சாகேப் பால்கே விருது’ கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்காமல் ஊடகங்கள், அமைதியாக இருப்பது ஏன்? நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து விசாரிக்காதது ஏன்?

ஏழைத் தாயின் மகன் என்றால் அவ்வளவு இளக்காரமா?