எடியூரப்பாவை ஏன் மோடி வாழ்த்தவில்லை..? குமாரசாமிக்கு வெட்டிய குழியில் விழுகிறாரா?

மஜத , காங்கிரஸ் கூட்டணியை மயிரிழையில் முறியடித்து எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்று ஒருவாரம் ஆகிறது.


இன்னும் மோடியிடமிருந்து வாழ்த்து வரவில்லை, அமித்ஷா அப்பாயிண்ட் மெண்ட் தரவில்லை.அவற்றின் பின்னால் உள்ள காரணம் அமைச்சர் பதவிக்கு நடக்கும் அடிதடிதான்.1500 கோடி பட்ஜட்டில் ஆட்சியை பிடித்தும்,அதை அனுபவிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் எடி!. பிராமணர்,லிங்காயத்துகள்,வொக்கலிகா,தலித்துக்கள் என பெரும்பான்மை ஜாதிகள் பெயரிலும்,வட கர்நாடகா,மைசூர் மாகாணம், மலநாடு, ஹைதராபாத் கர்நாடகா,குடகு என்று ஏரியா வாரியாகவும் மந்திரிபதவி கேட்டு நெருக்கடி தருகிறார்கள்.

இது தவிர கர்நாடக பிஜேபியின் முக்கியத் தலைகளான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்,முன்னாள் துணை முதல்வர்கள் அசோக்,ஈஸ்வரப்பா,மூத்த தலைவர்கள் பொம்மை,மாதுசாமி,பசவராஜ்,போப்பையா,ஸ்ரீராமுலு ஆகியோர் துணை முதல்வர் பதவி கேட்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இருந்து கட்சிமாறி வந்தவர்கள் அத்தனை பேரும் மந்திரிகளாக விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துத்தானே கொண்டு வந்தோம்,மந்திரி பதவியெல்லாம் தரக்கூடாது என்கிறார்களாம் ஒரிஜினல் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். எடியூரப்பாவுக்கோ யாரையும் துணை முதல்வராக்க விருப்பமில்லை. இப்போதைக்கு யாரை விடுவது ,யாரை சேர்ப்பது என்று தெரியாமல் தவிக்கும் எடியூரப்பாவின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறதாம்.

யாரையாவது தவிர்க்கப் போய் இன்னொரு அதிருப்தி கோஷ்டி உருவாகி , குமாரசாமிக்கு வெட்டிய குழியில் தானே குப்புற விழுந்தவிடக் கூடாது என்பதால் படு உஷாராக காய் நகர்த்துகிறார் எடியூரப்பா.106 எம்.எல்.ஏக்களில் பாதிப்பேர் பெயர்களுடன் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக எடியூரப்பா காத்திருக்க , சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் இப்போதே டெல்லியில் போய் டேரா போட்டு சிபாரிசு பிடித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.எடியூரப்பாவுக்குத்தான் எத்தனை இடையூரப்பா!