மாவட்ட ரீதியான பரிசோதனைகளை தமிழக அரசு ஏன் சொல்ல மறுக்கிறது..? தனியார் மருத்துவமனையினர் கொள்ளையடிக்க வழி விடுகிறதா அரசு..?

தினமும் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எத்தனை மரணம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடும் தமிழக அரசின் சுகாதாரத் துறை, மாவட்ட வாரியாக தினமும் எத்தனை நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றது என்ற தகவலை மட்டும் வெளியிடுவதே இல்லை.


குறைந்தபட்சம் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டத்திலாவது தினமும் எத்தனை நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்று பலரும் கேட்டுவரும் நிலையில், அதுகுறித்து தகவலை யாரும் தருவதே இல்லை. 

மேலும், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கடந்த சில நாட்களாக மிகவும் அவமதிக்கப்படுவதாகவும். அலைக்கழிக்கப் படுவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 36 மணி நேரங்கள் கடந்தும் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக வரும் தகவல் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவித்த அரசு, அதன்பிறகு அவற்றை கையகப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. 

அரசு இதுபோன்று அமைதியாக இருப்பதுதான் பல்வேறு சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அட்மிட் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பேக்கேஜாக லட்சக்கணக்கில் பணம் பிடுங்கப்படுவதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. 

மருத்துவமனையைப் பொறுத்து கொரோனா சிகிச்சைக்கு 3 லட்சம் தொடங்கி 10 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகள் வசூல் செய்கின்றன. இதை எல்லாம் அறிந்தும் அரசு அமைதியாக இருப்பதுதான் ஆச்சர்யம்.