நீதிமன்றத்தில் வாழைப்பழ காமெடி! முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஏன் அவகாசம் கேட்கிறார்!

திருட்டுக் கல்யாணம் செய்துகொண்டது போன்று மகாராஷ்டிராவில் யாருக்கும் தெரியாமல் அவசரம் அவசரமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்க, அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார்.


இந்தக் கூட்டணி செல்லாது என்று தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேற்று அவசர மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று காலை, நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பா.ஜ.க. சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜரானார்கள். சிவசேனா தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்கள். .

ஏற்கெனவே நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.

அதனாலே ஆளுநர் ஆட்சியமைக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது’’ என்று தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதி, ‘‘பெரும்பான்மை இருக்கிறதென்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமே’’ என்று கேட்டார். 

உடனே பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாழைப்பழ காமெடி போல பேசத் தொடங்கினார். ‘‘எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருக்கிறார். எனவே அதற்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது’’ என்றார். 

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாமல் 24 மணி நேர அவகாசத்தில் மெஜாரிட்டியைக் காட்ட வேண்டும் என்று கபில்சிபல் வாதிட்டார். தாமதம் ஆகும் ஒவ்வொரு மணி நேரமும் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்பு உண்டு என்று பதறினார்.

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்த தீர்ப்பு நாளை காலை வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர். குறைந்தது 10 நாட்களாவது அவகாசம் கிடைத்தால்தான் எம்.எல்.ஏ.க்களை வளைக்கமுடியும் என்று கருதுகிறது பா.ஜ.க. அதனை எப்படியும் வாங்க முடியும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

அதுசரி, அரசு என்ன சொல்லுதோ பார்க்கலாம்.