குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் ஏன் தடை விதிக்கவில்லை? கொந்தளிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்து, இடைக்கால தடை கொடுப்பதற்கு மறுத்துவிட்டது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய துணைத்தலைவர் ஓ.எம்.ஏ சலாம், ‘‘தேசத்தில் பற்றி எரிந்து கொண்டு இருக்கக்கூடிய பிரச்சினையான சி.ஏ.ஏ தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் தேசம் மற்றும் மக்களின் உணர்வுகள், கவலைகளை கருத்தில் கொள்ள தவறிவிட்டது.

உச்சநீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பு நடைமுறை ரீதியிலானது ஆகும். சர்ச்சைக்குரிய சட்டத்தின் இறுதித் தீர்ப்பை இது பாதிக்காது என்ற போதிலும் இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் வரை இந்தச் சட்டத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கின்றது.

பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் ஓய்வில்லாமல் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். இந்த சட்டம் மற்றும் மத்திய அரசின் பிற நடவடிக்கைகளான ழிஸிசி, ழிறிஸி போன்றவை தங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தோடும், கவலையோடும் குடிமக்கள் இருக்கின்றனர்.

அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள இந்த மக்கள் போராட்டம் அவர்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல வாரங்களாக நாடு முழுவதும் இரவு பகலாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் நீதித்துறையிலிருந்து உடனடி நிவாரணத்தை எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால், அடுத்துவரும் முடிவிற்காக அவர்கள் இன்னும் பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை மறுப்பதற்கு எதிரான மில்லியன் கணக்கான மக்களின் போராட்டம் ஆகும். இது மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசான இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கான போராட்டம் ஆகும். இது இந்துத்துவாவின் வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடத்தப்படும் மதச்சார்பற்ற இந்தியாவின் சித்தாந்த ரீதியிலான யுத்தமாகும் என்று தெரிவித்துள்ளார்.