உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு! ஏன் தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த வழக்கறிஞர்களும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொது நல வழக்ககுளில் ஆஜரானவர்களுமான இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் வீடுகளில் சிபிஐ அதிரடியாக சோதனை மேற்கொண்டது.


2 வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டவர் குரோவர். இவர் மத்திய அரசின் வழக்கறிஞராகவும் செயல்பட்டுள்ளார். போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிட்டவர் குரோவர்.

இதே போல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் இந்திரா ஜெய்சிங். இவர் பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ரா மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி கோகாய்க்கு எதிராக வழக்கு தொடுத்தவர் இந்திரா ஜெய்சிங்.

இவர்கள் இருவருக்கும் சொந்தமாக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள வீடுகளில் சிபிஐ இன்று திடீரென சோதனை மேற்கொண்டது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் செய்ததாக மத்திய உள்துறை கொடுத்த புகாரில் சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டது.

சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக வழக்கறிஞர்கள் இருவரும் கூறினர். மூத்த வழக்கறிஞர்கள் வீடுகளில் நடைபெற்ற சிபிஐ சோதனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மத்திய அரசு தங்களுக்கு எதிரானவர்களை பழிவாங்குவதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இதனிடையே வழக்கறிஞர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் சிபிஐ எதையும் பறிமுதல் செய்யவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.