பிரசாந்த் பூஷன் விவகாரத்தில் வெற்றி யாருக்குக் கிடைத்தது தெரியுமா?

எல்லா போராட்டங்களும் ஒரு சமாதானத்திற்கு வந்துவிடுவது தான் நல்லது. இதில் யார் வெற்றி பெற்றார்? யார் தோல்வியுற்றார் என விவாதிப்பது முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.


தான் சொன்ன கருத்தில் இருந்து பிறழாமல்,மன்னிப்பு கேட்க மறுத்து,உறுதி காட்டினார் பிரசாந்த் பூஷன்! அத்துடன் ’’அதற்காக எந்த தண்டனையையும் ஏற்கத் தயார்’’ என்றும் கூறியிருந்தார். நீதிமன்றம் அவரை தண்டிக்கவிரும்பவில்லை என்பது அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்ததில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்! 

இன்றைய தினம் ஒரு பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபாய் காசுபோட்டால் நம்மை ஏளனமாக பார்க்கும் சூழல் உள்ள போது,பிரசாந்த் பூஷன் ஒற்றை ரூபாயை அபராதமாக கட்டினால் போதும் என்று நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான உச்ச நீதிமன்றம் கூறியது என்றால்,இந்த பிரச்சினையில் அது பூஷனுக்கு சமாதானத்திற்கான பச்சைக் கொடி காண்பித்து பிரச்சினையை சூமுகமாக தீர்க்க முன்வந்துள்ளதாகத் தான் பொருள்!

பிரசாந்த் பூஷனும் ஏற்கனவே தான் ஒத்துக் கொண்டபடி தண்டனையை ஏற்கத் தயார் என்றதற்கேற்ப மீண்டும் பிடிவாதம் காட்டாமல் ஒரு ரூபாய் அபராதம் கட்ட முன் வந்தது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு தண்டனை வழங்கி அதனால் தனக்கு ஏற்படவிருந்த அவதூறுகளில் இருந்து சாதுரியமாக தன்னை விடுவித்துக் கொண்டது!

இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறையால் அது தன் இமேஜையும் குறைத்துக் கொள்ளாமல்,பூஷனையும் தண்டிக்க மறுத்து பெருந்தன்மையாக நடந்து கொண்டுள்ளது என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். மேற்படி விவகாரத்தில் இருந்து நமக்கு தெரியவந்திருப்பதாவது;

நீதிபரிபாலன அமைப்பு அரசுக்கோ அல்லது செல்வாக்கான பிரமுகர்களுக்கோ ஆதரவாக ஒரு சார்பு நிலை எடுத்தாலோ, நீதிபதிகள் நீதியிலிருந்து வழுவிலானாலோ யாருமே அதை தட்டிக் கேட்கவே வாய்ப்பில்லை என்ற மாயை உடைபட்டுள்ளது!

அப்படித் தட்டிக் கேட்பவர் அப்பழுக்கற்ற பொதுமனிதராக,இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு, எளிய மக்களின் உரிமைக்கு நீண்டகாலமாக உழைத்து வருபவர் என்ற நிலையில் நீதிமன்றம் அந்த மனிதரை மதிக்கவும் கூடும் என்று தெரிவித்துள்ளார் சாவித்திரி கண்ணன்.