இறுதிச் சடங்கை யார் நடத்துவது? 2 தேவாலயங்கள் இடையே மோதல்! 86 வயது மூதாட்டி சடலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!

எர்ணாகுளம்: 86 வயது முதியவரின் உடலை தானம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள கொலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் காரகத்தில் சாரா வர்கீ, (86 வயது). இவரும், இவரது குடும்பத்தினரும் கண்ணையாட்டுநிரப்பு செயின்ட் ஜான்ஸ் சர்ச் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் ஜாக்கோபைட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதன் அடிப்படையில் இறுதிச் சடங்கு செய்ய, சாரா வர்கீ குடும்பத்தினர் முயன்றுள்ளனர்.

எனினும், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நிர்வாகத்தினர், ஜாக்கோபைட்ஸ் சடங்குகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதுபற்றி உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பேரில், இரு தரப்பினரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர்.

துக்கம் நிகழ்ந்த வீட்டில் மாறி மாறி இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டதை தொடர்ந்து, சாரா வர்கீயின் குடும்பத்தினர் அவரது உடலை திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு,தானமாக வழங்க முடிவு செய்தனர்.

இதன்படி அவரது உடல் தானம் செய்யப்பட்டது. சண்டையின்றி பிரச்னை முடிந்தது. மதச் சண்டையை சமயோசிதமாக செயல்பட்டு தவிர்த்த, சாரா வர்கீயின் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.