அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82 வயதான புரட்சிக்கவிஞர் தோழர் வரவரராவின் உயிருக்கு யார் பொறுப்பு?

தோழரும் புரட்சிக்கவிஞருமான வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன.


எழுந்து நிற்கவோ ,கழிப்பறை செல்லவோ, பல் துலக்கவோ முடியாத நிலையில் நினைவுகள் அடிக்கடிப் பிறழ்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொண்டுள்ளது. 

பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை அடுத்து தற்போது மும்பை ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத்தெரிகிறது. இதேபோல கடந்த மே மாதம் 28ம் தேதி உடல்நிலை கெட்டு ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்துவத்திற்குப்பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் .

82 வயதாகும் தோழர் வரவர ராவ் இதயநோயாலும் சர்க்கரை நோயாலும் அவதியுற்று வருகிறார் .கடந்த 22 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் வரவர ராவ் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடைந்தெடுத்த பொய் என்பது உலகறிந்த உண்மை. வன்முறையைத் தூண்டியதாகவும் பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் புனையப்பட்ட பொய்களுக்கு எவ்வித ஆதாரத்தையும் இதுவரை காட்ட முடியவில்லை.

வரவர ராவ் மட்டுமின்றி 90 விழுக்காடு உடல் ஊனமுற்ற நிலையில் உள்ள பேராசிரியர் சாய்பாபா, அறிஞர் ஆனந்த் தெல்தும்டே, கவுதம் நாவ்லாக, சுதா பரத்வாஜ் ,பேராசிரியர் சோமா சென் உள்ளிட்ட 11 அறிஞர்களை எவ்வித ஆதாரமும் இல்லாமல் சிறையில் அடைத்து வதைத்து வருகிறது மோடி அரசு.

தன்னை எதிர்ப்பவர்களை யும் மக்களுக்காக போராடுபவர்களையும் சித்திரவதை செய்வதும் கொல்வதும் ஹிட்லர் உள்ளிட்ட பாசிஸ்டுகளின் கொடிய குணம். மோடியிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? ஆனால் வரலாறு பாசிஸ்டுகளை அவர்களின் போக்கில் விட்டு விடுவதில்லை. பாசிஸ்டுகள் மக்களால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு .

தோழர் வரவர ராவ் அவர்கள் மீது இதற்கு முன்பு பல்வேறு கொடிய வழக்குகள் போடப்பட்டும் அவை அனைத்துமே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலையாக இருக்கிறார் . அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் வரவரராவின் உயிருக்கு மோடி அரசு மட்டுமல்ல, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட இந்திய நீதித்துறையும் முழுப்பொறுப்பு. மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொண்டுள்ளது.