விபத்தில் தாயை பறிகொடுத்துவிட்டு உயிருக்கு போராடிய சிறுவன்! ரூ.1 லட்சம் சொந்த பணத்தை வழங்கிய இன்ஸ்பெக்டர்!

பழனி அருகே கார் விபத்தில் தாய் பலியான நிலையில் மகனை காப்பாற்றும் முயற்சியில் 1 லட்சம் ரூபாய் செலவிட்ட காவல் உதவி ஆய்வாளர் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.


மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச்  சேர்ந்தவர் சின்னக்கண்ணன். என்பவரது மனைவி ஈஸ்வரி. இவர் தனது 5 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து மலையை விட்டு இறங்கியவருக்கு தனது வாழக்கையை முடிக்கக் காத்திருக்கும் விபரீதம் தெரியவில்லை. மாலையில் வாடகை காரில் வரதமாநதியை பார்க்க முடிவு செய்த ஈஸ்வர் அடிவாரத்தில் உள்ள கார் ஓட்டுநரான பாலகிருஷ்ணன் என்பவரின் காரில் குழந்தைகளுடன் புறப்பட்டார். 

பழநி - கொடைக்கானல் சாலையில் வறட்டாறு பாலம் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார்  நிலைதடுமாறி 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கவிழந்தது. இதில் ஈஸ்வரி, அவரது மகன் சஞ்சய், காரை ஓட்டிச் சென்ற பால கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயெ பலியாகினர். படுகாயம் அடைந்த மற்றொரு மகன் பழனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மற்ற மூன்று குழந்தைகளான சரவணன், சங்கவி, மஞ்சுளா, கைடு ராஜேஷ் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பழனியின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சிறுவனை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல யாரும் இல்லாத நிலையில் பழநி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித்  அவனை கோவைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

ரஞ்சித் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுவனை அனுமதித்ததார். இதற்காக அவர் தனது சொந்தப் பணமான ஒரு லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

எது எப்படியிருப்பினும் முறைகேடுகளுக்கும், லஞ்சத்துக்கும் பெயர் பெற்ற காக்கிச் சட்டைகளுக்கு மத்தியில் மனித நேயம் மிக்க ரஞ்சித்தின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது