தலைமை நீதிபதி பதவியையே ராஜினாமா செய்தவர்! யார் இந்த தஹில் ரமணி? ஏன் ராஜினாமா செய்தார்?

தமிழ் நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, இதற்கு முன்பு, பாம்பே ஹைக்கோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவர்.


ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் சம்பந்தப்பட்ட பல்கீஸ் பானு வழக்கை நேர்மையாக விசாரித்தவர். அவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைக்கு மயங்காமல் காவி பயங்கரவாதிகளான ஒரு டாக்டர், ஒரு காவல் துறை அதிகாரி உள்ளிட்ட 9 மனித மிருகங்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கியவர். 

சென்னையில் 75 நீதிபதிகளுக்கு தலைமையாக இருந்தவரை, கிட்டத்தட்ட 4 லட்சம் வழக்குகளை நிர்வகித்து வருபவரை, வெறுமனே 2 நீதிபதிக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார், அங்கே மொத்தமே 1070 வழக்குகள் மட்டும்தான் இருக்கின்றன. 

தலைமை ஆசிரியரை மீண்டும் எல்.கே.ஜி.க்கு பாடம் நடத்த அனுப்புவது போன்ற நடைமுறை என்பதாலே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்கள். 

இது வரவேற்கத்தக்க முடிவு. செல்வச் சீமான்களின், சொகுசு கிளப்புகளில் என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியாது. அது போன்ற ஒரு கிளப்பாகத்தான், உச்சநீதிமன்ற கலேஜியம் இருந்து வருகிறது. வழக்கறிஞர்கள், நீதிபதியின் மாற்றத்தை எதிர்ப்பதோடு, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சுதாகர் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் சேர்த்து கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

நீதிபதி சுதாகர், தலைமை நீதிபதியாகி, ஒரு வருடம் 3 மாதங்கள் ஆகின்றன. அவரோடு ஒப்பிடுகையில், நீதிபதி ராமசுப்ரமணியம் பணி மூப்பில் மிகவும் இளையவர். இமாச்சல உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, இந்த ஆண்டு ஜூலை மாதம்தான் நியமிக்கப்பட்டார். அவரை இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக்க, செல்வச் சீமான்களின் கிளப் பரிந்துரைத்துள்ளது. அவரோடு சேர்த்து மேலும் 3 நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி சுதாகர் ஏன் புறக்கணிக்கப்பட்டார், நீதிபதி ராமசுப்ரமணியம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கான விளக்கத்தை செல்வச் சீமான்களின் கிளப் வழங்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில், தற்போது உள்ள நீதிபதிகளில், 6 பேர் பார்ப்பனர்கள். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள, 4 பேரும் பார்ப்பனர்கள். உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த 34 நீதிபதிகளில், 10 பேர் பார்ப்பனர்களாக இருந்தால், இந்தியாவின் பிற சாதிகளை சேர்ந்த வழக்கறிஞர்களில் ஒருவர் கூட உச்சநீதிமன்றத்துக்கு செல்ல தகுதியற்றவர்களா ? சமூகத்தில் வெறும் 2 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களுக்கு, உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு கூடுதலான பிரிதிநிதித்துவம் சரியானதுதானா ? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, இந்த பார்ப்பன நீதிபதிகளிடம் ஒரு வழக்கு சென்றால் இட ஒதுக்கீடு என்ன ஆகும் ?

மேலும், உச்சநீதிமன்றத்தில், தற்போது, ஒரே ஒரு தலித் நீதிபதிதான் உள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மற்றொரு தலித் நீதிபதி உச்சநீதிமன்றம் செல்வது, கேள்விக்குறியே. சமூகத்தில் 15 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருக்கும் தலித்துகளுக்கு, உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம் சரியானதுதானா ? இதுதான் சமூக நீதியா ?

அதனால்தான் வழக்கறிஞர் சமூகம் போராடுவதற்கு களத்தில் குதித்திருக்கிறது.