யாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா?

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சயின் அதிபர் தேர்தலுக்கான துணை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் குறித்து பிரபல பத்திரிகையாளர் எழிலன் பதிவு இது.


மயிலாப்பூர் பார்ப்பனப் பெண் சியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரீஸ் என்ற ஆப்ரிக்க அமெரிக்கருக்கும் பிறந்தவர். பொருளாதார நிபுரணரான டொனால்ட் ஹாரீஸ் கருப்பின அடையாளத்தைச் சுமந்தவர்.

இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள். சியமளாவுக்கும், டொனால்ட் ஹாரீசுக்கும் ஒத்துப் போகாத நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். மகள்கள் இருவரும் தாயிடமே வளர்கிறார்கள்.

டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு கமலா அவருக்கு எதிராக அமெரிக்காவில் பேசுகிறார் குறிப்பாக குடியேற்றச் சட்டங்களில் கொண்டு வரும் விதிமுறைகள், அகதிகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடுமையாகப் பேசிய கமலாவுக்கு அங்குள்ள ஜனநாயகச் சக்திகளிடம் ஓரளவு செல்வாக்கு கிடைக்கிறது. ஆனால் இவரும் டிரம்பைப் போன்ற தீவிர வலது சாரியகவே பல முறை தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதையும் நண்பர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தனது தாயின் பழுப்பு நிறம் பற்றி பேசிய கமலா குடியேறிகளுக்கு எதிரான சுவர் தொடர்பான டிரம்பின் எண்ணங்களை கடுமையாக விமர்சித்தே இதுவரை பேசி வந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் குடியேறியான ஜமைக்கா தந்தைக்கும், குடியேறியான சென்னை சியாமளாவுக்கும் பிறந்ததும் காரணமாக இருக்கலாம்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்கு கட்டிக்குள் போட்டியிடுகிறார். ஆனால், ஜனநாயகக் கட்சியில் ஜோ பிடனுக்கு இருக்கும் செல்வாக்கும் ஆதரவும் கமலாவுக்கு கிடைக்காததால் தோல்வியடைந்து இப்போது துணை அதிபர் வேட்பாளராக களமிரங்கியிருக்கிறார்.

இதுதான் விஷயம் நாம் இதில் கவனிக்க வேண்டியது. டி.என்.கோபாலன் சொல்வது போல கமலா தன்னை மயிலாப்பூர் பெண் என்றோ பார்ப்பனப்பெண் என்றோ எங்கும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி அமெரிக்காவில் ஓட்டு வாங்கவும் முடியாது என்பது அவருக்கு தெரியும். ஆனால் செல்லும் இடமெல்லாம் கமலா தன்னை கருப்பினப் பெண் என்கிறார்.

55 வயதாகும் கமலா ஹாரீஸ் தான் எழுதிய `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` நூலில், இப்படிச் சொல்கிறார். “ எனது தாய் கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்பதை புரிந்து கொண்டே எங்களை வளர்த்தார்.

நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

அவர் பேசும் பொது மேடைகளிலும் கருப்பின ஆதரவுதான் தூக்கலாக இருக்கிறது. மயிலாப்பூர் மந்திரம் அல்ல அது அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற உதவாது என்பது கடல் கடந்து போன கமலாவுக்கு தெரியும். பெரிய பத்திரிகையாளர்கள் என தமக்கு தாமே பீற்றிக் கொண்டலையும் கோபாலன் போன்றோருக்கு தெரியாமல் போனதேன்?

நிற்க, அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கருப்பினப் பெண் கமலா ஹாரீஸ் வெல்லட்டும். காரணம் அவர் பேசும் விஷயம் வலதுசாரித் தனம் இல்லாமல் இருக்கிறது அது போதும்.அமெரிக்க அதிபராக ஆசிய,ஆப்ரிக்க கலப்பின பெண் வரட்டும்.