ராகுல் காந்தி தோல்விக்கு யார் யாரெல்லாம் காரணம் தெரியுமா? புட்டுப்புட்டு வைக்கும் பேராசிரியர்!

ராகுல் காந்தியின் தோல்வி ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான், ஏனென்றால் அவரது தோழர்கள்தான் தோல்விக்குக் காரணமாக இருந்தனர் என்று முழுமையான ஆய்வு வெளியிட்டிருக்கிறார் பேராசிரியர் பிரபாகர்.


இந்த தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் மான்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியோ எந்த வித தேர்தல் உடன்பாடோ கிடையாது என்று எந்த கணத்தில் முடிவு செய்தார்களோ அந்த கணமே இந்த தோல்வி முடிவு செய்யப்பட்டு விட்டது.

பாஜகவின் வெற்றியின் முதல் அத்தியாயம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. அன்றைய தினம் மிக நிச்சயமாக நாக்பூரில் ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையகத்தில் இந்த முடிவை வெடி போட்டு ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருப்பார்கள். அவர்களின் அந்த முடிவு இந்திய இறையாண்மையின் இதயத்தில் கடப்பாரையைப் பாய்ச்சிய முடிவாக இருந்தது. என்னைப் போன்ற மதசார்பற்ற அரசியலை நேசிக்கிறவர்களை அதிர்ச்சியடைய வைத்த முடிவாக இருந்தது.

இந்து ஃபாஸிஸம் விஷம் போல இந்திய மண்ணில் இறங்கிக் கொண்டிருந்த சூழலில் அவர்களின் இந்த முடிவு ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்று நான் தீர்மானமாக நம்பினேன். அதுவே இந்த தேர்தல் முடிவாக வந்து சேர்ந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் அசுரத்தனமாக வளர்ந்து நிற்கும் ஒரு சமூகத்தில் எந்த பைத்தியக்கார ர்களாவது இது போன்ற முடிவை எடுப்பார்களா? ஆர்எஸ்எஸோடு கள்ளத்தொடர்போ அல்லது வம்சாவலித் தொடர்போ உள்ள ஒரு கூட்டம்தான் இந்த முடிவை எடுக்கும் என்றே அன்று எனக்குத் தோன்றியது. அதை நான் முகநூலில் பதிவிடுவும் செய்தேன்.

அந்த அதிர்ச்சி அரங்கேறிய பல மாதங்களுக்குப் பிறகு தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியது. ராகுல் காந்தி ஒரு புதிய நம்பிக்கையாக, புதிய சக்தியாக, புதிய எழுச்சியாக மேலெழுந்து வந்தார். அந்த நாட்களில் ராகுலை தொடர்ந்து கவனித்து வந்தேன். ராகுல், ‘பப்பு’ என்று அவர் மீது வைத்த அசட்டு கருத்துக்களை அனாயசமாக உடைத்தெறிந்து மேலே வந்தார்.

அவருடைய உரையாடல், அவருடைய உரைகள், அவருடைய மேற்கோள்கள், எல்லாமே ஒரு சிறந்த அரசியல் தலைவர் இந்தியாவிற்கு கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. நேருவிற்கு பிறகு மிகவும் அரசியல் அறிவும் முதிர்ச்சியும் நிறைந்த ஒரு காங்கிரஸ் தலைவர் உருவாகியிருக்கிறார் என்றே நான் நம்பினேன். (இப்பொழுதும் நம்புகிறேன் இந்த ராகுலின் எழுச்சியோடு மதசார்பற்ற அணிகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மோடியின் ஃபாஸிஸ அரசியலை தவிடு பொடியாக்கிவிடலாம் என்று தீர்மானமாக நம்பினேன். அப்பொழுதுதான் மதசார்பற்ற சக்திகள் ராகுலை காலை வாரத் துவங்கின..  

கம்யூனிஸ்ட்கள் அவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவு படி ராகுலிடம் ஒரு பாரா முகத்தைத் துவக்கத்திலிருந்தே காட்டினார்கள். (அவர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் திடீரென பெரிய யோக்கிய சிகாமணிகள் போல நடக்க ஆரம்பிப்பார்கள் என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள். ஒரு தீவிர தீண்டாமையை கடைபிடிப்பார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்குள் இறங்கி இருக்கிற பார்ப்பன விஷம் அவர்களின் ரத்தத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆர்கே நகர் தேர்தலில் அவர்கள் தனி மேடையில் இருந்துதான் திமுகவை ஆதரிப்போம் . ஒரே மேடையில் பங்கெடுக்க மாட்டோம் என்று அறிவித்து செயல்படுத்தியதை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அவ்வளவு பரிசுத்தமாம். யோக்கியமாம். பருப்பாம். திமுகவுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால் அவர்களின் கற்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிடுமாம்.இன்று திமுக இல்லையென்றால் அவர்களுக்கு அரசியல் முகமே இல்லை.)

அப்பிடி ஒரு தீண்டாமையை ராகுலின் விசயத்திலும் காட்டினார்கள். மற்ற மதசார்பற்ற தலைவர்களான(?) சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஸ் யாதவ். என ஒவ்வொருவரும் ஆளுக்கொரு முகம் காட்டினார்கள். குணம் காட்டினார்கள்.ராகுல் எந்த இடத்திலும் தான் பிரதமர் என்று சொல்லவே இல்லை. பிரதமர் வேட்பாளரை பின்பு முடிவு செய்து கொள்ளலாம். உங்களில் யார் பிரதமாக இருப்பதற்கும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றே சொன்னார். அவர் மிகுந்து நேர்மையுடனேயே அந்த வாசகத்தை சொன்னார். இந்த திருட்டுப் புத்தி கொண்ட தலைவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பிரதமாகும் கனவு கொண்டிருந்ததால் ராகுலை சந்தேகித்தார்கள். ராகுலை தனித்து விட்டார்கள்.

உபியில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தர முடியும் என்று மாயாவதியும் அகிலேஸும் சொன்னார்கள். டெல்லியில் ஒரு இடம்தான் தர முடியும் என்று அரவிந் கெஜ்ரிவாலும் கூட்டணிக்கே வர முடியாது என்று ம ம்தாவும் ஆளுக்கொரு சட்டாம்பிள்ளைத்தனம் செய்தார்கள்.. கர்னாடாகாவில் ராகுல் எடுத்த பெருந்தன்மையான முடிவை வைத்தே காங்கிரஸை அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்தார்கள் நம் எதிர்கட்சித் தலைவர்கள் இவ்வளவு பெரிய மடையர்களா என்று தோன்றிய நாட்கள் அவை. இவர்கள் எல்லோரும் நிச்சயம் மண்ணை கவ்வுவார்கள் என்று அன்றே நான் நினைத்தேன்..இவர்களின் பேராசை இவர்களையும் நாட்டையும் இக்கட்டில் நிறுத்தும் என்று நம்பினேன்.

இந்திய அரசியல் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இரண்டு தலைவர்களை இந்த மண்ணிற்காக பறிகொடுத்த அந்த குடும்பத்தின் மூன்றாம் தியாக பிரும்மத்தை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

மற்ற தலைவர்கள் ராகுலை தனித்து விட்டார்கள். பத்மவியூகத்தில் தனித்துப் போய், போர் செய்த அபிமன்யூ போல ராகுல் பாஜகவின் அசுர வளையத்திற்குள் தனித்துப் போய் போராடினார். ராகுல் எந்த நிலையிலும் சோர்ந்து போகவில்லை. இந்தியா முழுவதும் சிரித்த முகத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு பிரச்சாரம் செய்தார்.. அபிமன்யுவுக்கு ஏற்பட்ட முடிவு போல ஒன்றுதான் ராகுலுக்கு ஏற்பட்டது. இந்த கிழவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இன்று மதசார்பற்ற அரசியலுக்கு ஒரளவேனும் இடம் கிடைத்திருக்கிறது என்றால் அது ராகுலின் ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த இடம்தான். ஃபாஸிஸ சக்தி பாஜகவிற்கு மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்றால் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் துவங்கி மற்ற மதசார்பற்ற அரசியல் வாதிகளின் முட்டாள்தனம் மற்றும் சுயநலத்தால் கிடைத்தது.

ராகுல் இந்திய மதசார்பற்ற நேர்மையான அரசியலின் புதிய முகம். அவருடைய உரையாடலில் மிகுந்த நேர்மை இருக்கிறது. மேன்மை இருக்கிறது. இனியேனும் ராகுலுடன் இணைந்து மற்ற மதசார்பற்ற சக்திகள் பயணம் செய்வதை உறுதி செய்யாவிட்டால் இந்தியா நாசக்காடாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்க்கப் போர் என்பது காங்கிரஸோடு போர் புரிவது என்ற அமெச்சூர் புரிதலில் இருந்து விடுபட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்ததைப் போல, காங்கிரஸ் முதற்கொண்ட இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லா போராட்டங்களிலும் ஒன்றாக நின்று , எல்லா சிறு சிறு நிகழ்வுகள், உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள் இவற்றில் ஒன்றாக நின்று செயல்படுவதை முதல் அரசியல் திட்டமாக கொள்ள வேண்டும். இதை கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்று நடத்த வேண்டும்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மம்தா, கம்யூனிஸ்ட்கள் ஒரு கூட்டணியாக செயல்படுவது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் அதன்பின் இந்திய அரசியல் குறித்து யாரும் கவலைப்படும் சூழல் உருவாகாது.