எந்த கட்சிக்கு சென்றாலும் உடனே முக்கிய பதவி! யார் இந்த சசிரேகா?

எந்த கட்சிக்கு சென்றாலும் உடனடியாக பதவி பெறும் சசிரேகா யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


டிடிவி தினகரனின் மிகத் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர் சசிரேகா. ஊடக விவாதங்களில் தினகரன், சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்காக மிக நயமாக வாதங்களை எடுத்து வைப்பவர் இவர். அதே அரசியல் கட்சி மேடை என்றால் காதால் கேட்க முடியாத அளவிற்கு ஆபாசமாக பேசக்கூடியவர் சசிரேகா.

இவர் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்து வந்தார். மேலும் தனது கணவர் அன்பு மூலமாக டிடிவி தினகரன் கட்சியின் சமூக வலைதள பிரிவையும் சசிரேகா கவனித்து வந்தார். இந்த நிலையில் திடீரென இவர் அதிமுகவில் இணைந்தார்.

முதலில் அதிமுக வட சென்னை மாவட்ட நிர்வாகி ராஜேஷை சந்தித்து பேசிய அவர் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். பிறகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசிவிட்டார். 

பிறகு திடீரென சசிரேகாவை அதிமுக செய்தி தொடர்பாளராக நியமித்து உத்தரவும் பிறப்பித்தது அதிமுக. எந்தவித பெரிய பின்புலமும் இல்லாத நிலையில் சசிரேகாவுக்கு எப்படி உடனடியாக அதிமுகவில் செய்தி தொடர்பாளர என முக்கிய பதவி வழங்கப்பட்டது என்கிற கேள்வி எழுந்தது.

இது குறித்து விசாரித்த போது சசிரேகா முதலில் சன் நியுஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு அங்குள்ள சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த வேலையை சசிரேகா உதறித்தள்ளினார். பிறகு பாலிமர் நியுசில் செய்தி வாசிப்பாளராக சசிரேகா பணியாற்றி வந்தார்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்து விலகிய சசிரேகா ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஆகிவிட்டார். இது தான் அவரது அரசியல் ஆசைக்கு தீனி போடுவதாக அமைந்துவிட்டது. அதிமுகவில் இருந்து பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற போது சசிகலா சார்பில் பேச ஆள் தேவைப்பட்டது.

அப்போது சசிகலா ஆதரவாளர் என ஊடகங்களில் சசிரேகா பேச ஆரம்பித்தார். யார் இவர் என தினகரன் விசாரிக்க சசிரேகா ஜெயா நியுஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் என்று தெரிந்து கொண்டார். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாகவே சசிரேகாவை தங்கள் ஆதரவாளராக தினகரன் அங்கீகரித்தார்.

பிறகு அமமுக ஆரம்பிக்கப்பட்ட பிறகு சசிரேகா செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் தினகரன் கட்சியின் சமுக வலைதள தொடர்புகளையும் சரியாக பயன்படுத்தி அங்கும் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அமமுகவில் முக்கிய பொறுப்பாளரான பிறகு செய்தி வாசிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் தான் திடீரென அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளர் ஆகியுள்ளார். பலமான ஊடகத் தொடர்பு மற்றும் சமூக வலைதள அனுபவம் தான் அதிமுகவில் சசிரேகாவுக்கு முக்கிய பொறுப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.