சுர்ஜித் அவலத்துக்கு யார் பொறுப்பு? என்ன தண்டனை தரவேண்டும்?

இன்று தமிழகமே சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறது. அந்த ஆழ்துளை குழி தோண்டியது அவரது தந்தை என்பதால் எந்த எதிர்ப்புக்குரலும் இல்லை, ஆனால், இது சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார் தொல்காப்பியன். இதோ அவரது பதவி.


ஏழு வருடங்களுக்கு முன்னால் ஆழ்துளை குழியை தோண்டுகிறார், ஒரு தந்தை. ஏழாவது வருடம் அந்த குழிக்குள் அவரது மகனே விழுந்து உயிருக்கு போராடுகிறான். தமிழகம் தத்தளித்துத் தடுமாறுகிறது. அவர் குழி தோண்டிய கடந்த ஏழு வருடங்களில் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்து விட்டன. ஊடகங்களும் அலறின. அப்போதும் அந்த 'நடுகாட்டுப்பட்டி' அப்பனின் புத்திக்கு ஏறவில்லை

இடையில் ஒரு சினிமாவும் வந்து அந்த பயங்கரத்தை படம் பிடித்துக் காட்டியது. கோபி நயனாரின் 'அறம்' என்கிற அந்த சினிமாவை நாடே பார்த்து சிலிர்த்துக் கொண்டது. அப்போதும் அந்த 'நடுகாட்டுப்பட்டி' அப்பனுக்கோ அம்மாவுக்கோ விழிப்புணர்வு ஏற்படவில்லை. இவை எதுவும் அந்த தகப்பனை தனது தவறு குறித்து திடுக்கிட வைக்கவும் இல்லை!

இன்றைக்கு அந்த அப்பாவும் அம்மாவும் 'எப்படியாவது எங்கள் குழந்தையை காப்பாற்றுங்கள்' என்று அழுது புலம்புகிறார்கள்.அரசும் அமைச்சர்களும் போராடுகிறார்கள். மக்கள் ஆங்காங்கு கவலைகளோடும் துயரங்களோடும் குந்திக் கிடக்கிறார்கள்.

என்ன செய்வது! அலட்சியங்களும் பொறுப்பின்மைகளும் அவ நம்பிக்கக்களுமே மக்களின் சுபாவங்களாக இருக்கின்றனவே! அரசின் சட்டங்களின் மீது அலட்சியம்; பொது சாரங்களின் மீது பொறுப்பின்மை; சாலை விதிகளின் மீது அலட்சியம்; சுத்தம் சுகாதாரத்தின் மீது பொறுப்பின்மை;

நம்மைப் போல அடுத்தவர்களை பார்ப்பதில் ஓவ்வாமை; சிந்தனைகளில் ஒழுக்கம் இன்மை; அரசின் ஆலோசனைகளில் நம்பிகை இன்மை; கட்டுப்பாடுகளின் மீது அவ நம்பிக்கை; நேர்மையில் நாட்டம் இன்மை;குறுக்கு வழிச் சிந்தனைகளில் ஆர்வம்; ஒழுங்கு முறைமைகளில் மீது வெறுப்பு; கட்டுப்பாடின்மையில் மிகுந்த வேகம் காட்டுதல்! இவைகள் எல்லாம் மக்களின் அடிப்படை சுபாவங்களாக இருக்கின்றன.

இத்தகைய மக்களால் உருவான அரசு எப்படி இருக்கும்? மக்களுக்கான அரசா? மக்களின் அரசா? எது நமக்கு வேண்டும்? இப்போது இருப்பது மக்களின் அரசு. இது மக்களுக்கான அரசு அல்ல. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி நடந்து கொள்வது மக்களின் அரசு. மக்களை ஒரு சமூகமாக மதித்து அந்த சமூக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது மக்களுக்கான அரசு.

நமக்கு மக்களுக்கான அரசுதான் வேண்டும். மக்களின் அரசு வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! மக்களுக்கான அரசு வேண்டும் என்றால், மக்கள் மாற வேண்டும். சட்டத்தை மதிக்கும் பண்பு; விதிகளை போற்றும் குணம்; சுத்தம் சுகாதாரத்தின் மீது கவனம் கொள்ளும் பாங்கு; நேரியல் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் பற்று வைத்தல்; வாழ்வு குறித்த கட்டுப்பாடுகளில் ஆர்வம் காட்டுதல்;

நேர்மையில் நாட்டமும் குறுக்கு வழிகளில் வெறுப்பும் வைத்தல்; ஒழுக்க முறைகளை அடுத்த தலைமுறைக்கு வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்பித்தல் போன்ற சாரங்களில் மக்களிடம் மாற்றம் வேண்டும்!

மக்களிடம் இவை குறித்த கருத்து மாற்றம் ஏற்பட்டால்தான் மக்களுக்கான அரசு நமக்கு சாத்தியப்படும்! அப்படி தழைத்து எழும் மக்களுக்கான அரசில் 'சுஜித்' போன்ற எந்தக் குழந்தையும் பயங்கரங்களை சந்திக்காது என்று எழுதியிருக்கிறார்.