பீடோபைல் யார் தெரியுமா? பலான படம் பார்த்தால் போலீஸ் கைது செய்யுமா? விஷயத்தை போலீஸே புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை!

‘இணையத்தில் குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்ப்பதில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.


இந்தியாவில் சென்னை முன்னிலை வகிக்கிறது’ என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அது தொடர்பாக தமிழக போலீஸ் மேற்படி ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் தரவிறக்கி வைத்திருப்பவர்களை பட்டியல் எடுத்து வருகிறது என்றும் அதன் அடிப்படையில் அந்த நபர்கள் அழைத்து விசாரிக்கப்பட இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வட்டமடிக்கின்றன. 

ஆனால், இதில் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பவர்கள் என்ற உண்மையை சொல்லாமல், பிட்டு படம் பார்ப்பவர் என்ற ரீதியில் இந்த விஷயத்தை மக்கள் அணுகுகிரார்கள். இது தவறு என்று விலாவாரியாக விளக்குகிறார் லெனின் சுமன்.

வயது வந்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரணமாக கடந்து செல்லக்கூடியது இந்த பிட் படம் வகையறா. அதற்கு இணையாக, கொடிய குற்றமான குழந்தைகள் ஆபாசத்தையும் ஒரே தராசில் நிறுத்துகிறார்கள். பெரியவர்களின் தினவுக்கு வடிகாலாக வந்துபோகும் வயது வந்தோர் தளங்கள் உலகின் எல்லா மூலைகளிலும் சாதாரணமாக இயங்குகின்றன.

ஆனால் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குழந்தை ஆபாசப் படங்கள், வீடியோக்களின் பின்னே குழந்தைக் கடந்தல், போதை மருந்து மாபியா, இதர நிழலுலக குற்றங்களின் நெட்வொர்க் இருக்கிறது. முதல் சொதப்பல் காவல்துறையிடம் இருந்தே கிளம்பியது. இதனை எப்படி கையாள வேண்டும் என்ற சுதாரிப்பின்று உளறிக் கொட்டுகிறார்கள்.

குழந்தைகளின் ஆபாசத்தை ரசிப்பவர்களை பட்டியல் எடுக்கிறார்களாம். அதன்படி கூப்பிட்டு விசாரிப்பார்களாம். குழந்தைகளை ஆபாசமாக அணுகுபவர்கள் எப்படி இயல்பான மனிதர்களாக இருப்பார்கள். மனநிலை பிறழ்ந்த பீடோபைல் ஆகவோ அதற்கு அருகிலோ இருப்பவர்கள் அல்லவா அவர்கள்.

பட்டியல் எடுக்கிறோம் என்றோ, விசாரிக்கிறோம் என்றோ உதார் விடுவதன் மூலமாக அவர்கள் பயந்துவிடுவார்கள், மசிந்து விடுவார்கள், தங்கள் தவறான நடவடிக்கையை நிறுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா? காவல்துறைக்கு அடுத்தபடியான சொதப்பல்கள் சமூக வெளியில் அலைபுரள்கிறது. கோரம் மிகுந்த குழந்தை ஆபாசத்தை, இளவயதினரின் பிட்ஸ் ரசனையுடன் இரண்டற கலந்துவிட்டார்கள். இப்போது பதின்வயதினர் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறோம்.

ஆபாச சகதியில் கால் வைக்கும் அவர்கள், இனி குழந்தைகள் தளங்களை நோக்கி நகர்வார்கள். இது அந்த பதின்பருவத்தினரின் உளவியலை வெகுவாய் பாதிக்கும். நிழலின் பாதிப்பு நிஜத்தில் ஏடாகூடமாய் வெடிக்கவும் நேரிடும். இந்த பீடோபைல் குறித்த விபரீதத்தை தற்போதைய அலட்சியப்போக்கு நீர்க்கச் செய்துவிடும்.

அதற்கு நாம் கொடுக்கும் விலை சற்று அதிகமாக இருக்கக்கூடும். குழந்தை ஆபாசங்களை ரசிப்போர் மீது காவல்துறை ரகசியமாய் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரமானவர்களை போக்சோவில் போடுவோம் என்கிறது மத்திய உள்துறை. தமிழக காவல்துறை உடனடியாக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவையெனில் சிலருக்கு மனநல ஆலோசனையும் கூட வழங்கலாம்.