தமிழில் நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பவை என்ன தெரியுமா?

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசுவது சுலபமாக இருக்கலாம்.


ஆனால், நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமாகத் தெரியவில்லை. குறிப்பாக நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு கிடைப்பது கடினம்தான். இதற்கான காரணங்கள் இவைதானாம்.

* ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதிப் பழகினால்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகலாம் என்று இருக்கிறது. எனவே நீதிபதிகளின் சுயநல தொழில் முன்னேற்றத்துக்காக தமிழ்ப் பற்றுள்ள நீதிபதிகள் கூட ஆங்கிலத்தில்தான் தீர்ப்பு எழுதுகிறார்கள். எந்த நீதிபதியும் தன் பதவி உயர்வைப் பலி கொடுத்துத் தமிழில் தீர்ப்பு எழுதுவார்களா?

* ஒரு மாநில நீதிபதி இன்னொரு மாநில நீதிபதியாகப் போகிறபோது அவருக்கு அம்மாநில மொழி, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் தெரியாது. இதனால் அவர் ஆங்கிலத்திலேயே தீர்ப்பு எழுதுகிறார். 

* தமிழில் நீதி கிடைக்க அடிப்படை வசதி வாய்ப்பு நீதிமன்றங்களில் இருக்கிறதா? தமிழில் அனைத்து சட்டங்களும் இருக்கின்றனவா ? தமிழில் வாதாட வழக்கறிஞர்களுக்குத் தெரிகிறதா? கணிணியில் தமிழில் தட்டச்சு செய்ய நீதிமன்றத்தின் எல்லா கட்டங்களிலும் வசதி இருக்கிறதா? நீதிபதி தமிழில் தீர்ப்பு எழுத பயிற்சி எடுக்கப்பட்டுள்ளாரா? அப்போது தமிழில் நீதி எப்படி கிடைக்கும்?

* ஏழு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்பு கிடைப்பதாகச் சொல்கிறார்கள். எட்டாவது மாநிலமாக தமிழ்நாடு அமைய முயற்சி எடுக்கப்படுகிறதா?

* ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டு சார்பு நீதிமன்றங்கள் தமிழைப் பயன்படுத்தலாம் என்கிற நிலை வந்தது. ஆனால் இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறதா?

* தமிழ்நாடு எனும் மாநிலம் உருவாகிறது. நீதிபதி மகராஜன் தலைமையில் இருந்து வந்த “தமிழ்நாடு ஆட்சிமொழி ஆணையம்” அவருக்குப் பிறகு மூடப்பட்டு விட்டது. இப்போது அந்த ஆணையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அது சுறுசுறுப்பாகச் செயல்படுகிறதா?

* இந்தியாவின் தேசிய மொழியாக இருப்பதால் வழக்கறிஞர்கள் இந்தியில் பேசுகிறார், நீதிபதி இந்தியில் பேசுகிறார். எல்லா சட்டங்களும் இந்தியில் கிடைக்கின்றன. எனவே இந்தி பேசும் மாநிலங்களில் தீர்ப்பு இந்தியில் கிடைக்க வாய்ப்பு அதிகம். 

* கணிணி எந்த மொழியையும் பிழையின்றி இன்னொரு மொழியாக மாற்றும் மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் பார்லிமெண்டிலிருந்து நீதிமன்றம் வரை வந்தால்தான் இந்தியா நல்லரசாக மாறும். தண்டனை ஒருவருக்கு வழங்கப்படும்போது எந்த தண்டனை எந்த காரணத்தால் தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று ஒருவருக்குத் தெரிய வேண்டுமானால் தீர்ப்பு அம்மாநில மொழியில் இருக்க வேண்டாமா?