2018ன் சிறந்த தமிழ் படம் எதுன்னு தெரியுமா? காலாவா? 96ஆ?

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த படம் எது என்பதைப் பார்க்கலாம். .

இந்த வருடம் சிறந்த திரைப்படங்களுக்கு கடுமையான போட்டி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், ஒருசில மிகச்சிறந்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க நான்கு படங்களை இங்கு பார்க்கலாம். காலா – நிலத்துக்கான அரசியலை மிகவும் உரத்த குரலில் பேசிய திரைப்படம். ஏழை மக்களுக்கு உயிரும் வாழ்க்கையுமாக இருக்கும் நிலத்தை, வியாபாரம் செய்து பணமாக்க முயலும் கார்ப்பரேட் உலகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். படம் முழுக்க அரசியல் குறியீடுகள்.  படம் முழுக்க காலா சேட்டாக வயசுக்கு ஏற்ற கேரக்டரில் நடித்து அதகளம் செய்யும் ரஜினிகாந்த். நிலம் எங்கள் உரிமை என்று பேசியதற்காக சிறந்த படம் விருது பெறும் தகுதி பெறுகிறது.

பரியேறும் பெருமாள். ஜாதி வெறியின் கொடூரம் பள்ளிகளிலும், கல்லூரிகளில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உண்மைக்கு மிக அருகில் சொல்லியிருக்கும் படம். விலகிவிலகி போனாலும் தேடி வந்து உதைக்கும் ஆதிக்க சக்தி மனப்பான்மையை அச்சு அசலாக காட்டியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஏன் என்றே தெரியாமல் ஜாதியின் மீது பற்றாக இருப்பதும், அதற்காக கொலை செய்யவும், உயிரை விடவும் தயாராக இருக்கும் கூட்டத்தை அறிமுகப்படுத்தி அதிர வைத்திருக்கிறார். இயல்பான நடிகர்களுடன் சொல்ல வந்ததை சிறப்பாக சொன்ன படம்.

மேற்குத் தொடர்ச்சி மலை. ரோடு பள்ளமும் மேடுமா இருக்கு என்று டூவீலரில் செல்வதற்கு அலுத்துக்கொள்ளும் மக்களுக்கு மத்தியில், ரோடு இல்லாத மலைக்கிராம மக்கள் எத்தனை சிரமத்துடன் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. மலையாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் எளியவர்களை அழிப்பதற்கு கொஞ்சமும் தயங்குவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன படம். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் தமிழ் சினிமாவுக்குப் புதிது என்பதால் சிறந்த சினிமா விருதுக்கு இந்தப் படமும் பட்டியலில் இணைந்து விடுகிறது.

96. செல்போன் யுகத்தில் வாழும் இன்றைய மக்களுக்கு ஒரு பெண்ணிடம் பேசுவதும் பழகுவதும் உலகத்திலேயே ஆகப்பெரிய சாதனையாக ஒரு காலம் இருந்தது என்று சொல்வதை நம்பக்கூட முடியாது. அப்படியொரு காலகட்டத்தை எடுத்து ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் பள்ளியில் சொல்லப்படும் காதல் சங்க இலக்கியம் என்றால் 40 வயதில் சொல்லப்படும் காதல் காமத்துப்பால். ஆனால், எல்லை மீறாத அழகு. எல்லோரையும் காதலிக்கவும், தங்கள் காதலை மீண்டும் நினைவுபடுத்தவும் செய்த படம் என்பதால் இதுவும் சிறந்த படத்துக்கான பட்டியலில் சேர்கிறது

இந்த நான்கு படங்களில் இருந்து ஒரு படம்தான் டைம்ஸ் தமிழ் 2018 சிறந்த திரைப்பட விருது பெற இருக்கிறது. அது என்ன படம் என்று தெரிய வேண்டுமா, இதோ டிசம்பர் 30ம் தேதி விருதுகள் அறிவிக்கப்படும். அதுவரை காத்திருங்கள்.