கொரோனா அச்சத்தில் யார் வேலைக்குப் போனாலும், போகாவிட்டாலும் தூய்மைப் பணியாளர்கள் மட்டும் வேலை செய்தே ஆகவேண்டும். அவர்களுக்கு கையுறை, மாஸ்க், சானிடைஸர் போன்றவை எல்லாம் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும் அவர்கள் வேலை செய்தே தீரவேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை எப்போது..! சம்பளத்துடன் உடல் நலனையும் கவனிக்குமா அரசு..?

இந்த நிலையில் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது வரை இவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்குத்தான் வேலை செய்கிறார்கள்.
இவர்களின் சம்பளம், மாநகராட்சி தொடங்கி,கிராம ஊராட்சி வரை பலவிதமாக மாறுபடுகிறது. ஊராட்சிகளில் ரூ 4,500 தான். அதுவும் நிரந்தர ஊழியர்கள் ஆன பிறகு கிடைக்கும் உச்சபட்ச சம்பளம் தான் இது! நிரந்தரமில்லா ஒப்பந்த தொழிலாளர்களுக்கோ வெறும் ரூ3,000. அவ்வளவு தான்! நம்பமுடியாவிட்டாலும் உண்மை இது தான்!
இந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதக் கூடுதல் ஊதியம் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே என்றால்,அது நியாயமாக இருக்காது.அதனால் முதலில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன்பிறகே கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
இதுதவிர இப்போது சாக்கடை உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். எனவே அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்ய வேண்டியதும் அவசியம்.
நமது பிரதமர் மோடி துப்புரவு பணியாளர்கள் சிலர் கால்களை கழுவி போஸ் கொடுத்துவிட்டு, அத்துடன் அவர்களை சுத்தமாக கைவிட்டுவிட்டார்!,அவர்களின் துயர்களை செவியில் வாங்கக் கூட தயாரில்லாமல், தன் செயலுக்கான பாராட்டில் உள்ளம் குளிர்ந்து போனார்,அதுபோல,எடப்பாடியாரும்அறிவிப்பு,மற்றும், கைதட்டல்களோடு விட்டுவிடக் கூடாது!
இந்த ஒரு மாத கூடுதல் சம்பளம் இருக்கட்டும்! இது வரை பல ஆண்டுகளாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி, ஒரளவேனும் கவுரவமாக வாழக்கூடிய சம்பளத்தை வழங்க வேண்டும். இந்த கொரோனா ஆபத்திலும் மனத் துணிவுடன் சாக்கடையில் இறங்கி எல்லாம் பணியாற்றி நமக்கு சேவை செய்பவர்களுக்கு அது தான் உண்மையான முதல் மரியாதையாக இருக்கும்!